பக்கம்:முல்லைக்கொடி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

முல்லை நிலத்திற்குரிய பெரும் பொழுது கார்காலம் ஆகும். அக் காலமே ஆயர் தம் ஊரில் குடும்பத்தோடு வாழும் காலம். ஆதலின், அவர் அக வாழ்விற்குரியது அதுவேயாகத் திகழ்வதாயிற்று. முல்லைக்குச் சிறு பொழுது மாலைக் காலம்.

இனி, இம் முல்லைக் கலியினைப் பாடிய தமிழ்ச் சான்றோர் சோழன் நல்லுருத்திரன் என்போராவர். இவர் தம் இயற்பெயரான நல்லுருத்திரன் என்பதனோடு, சோழன் என்ற அடைமொழியும் வழங்குதல் கொண்டு, இவரைச் சோழ நாட்டிற் பிறந்தவர், அதிலும் சோழ மன்னர் மரபிலே வந்து தோன்றியவர் என்பர் தமிழறிஞர். அவ்வாறு கருதுவது ஓரளவிற்கு இயல்பே என்றாலும், முல்லைக் கலியினை நாம் நன்கு ஆராய்ந்தால், அக்கருத்தி னுக்கு அரண் செய்வதற்கானவை யாதும் காண இயலாத வராகின்றோம்.

முல்லைக் கலியின் பல பாக்களுள், ஆயர்கள் வாய்மொழியாகப் பாண்டியர் பெருமையும், உயர்வும் பல படியாகக் கூறப்பட்டிருக்கின்றன. ஆயர்கள் குடியின் தொன்மையைப் பற்றிக் கூறும்போது கூட, ஆசிரியர் தென்னவனின் துணை நின்ற தொன்மை சால் மரபினர் என்றே அவர்களைக் குறிக்கின்றார். இதனால், அவர் பாண்டிய நாட்டின் பால் பெருமதிப்பு உடையவர் எனவும், பாண்டிய மன்னரை வாழ்த்திப் பாடும் பான்மை யுடையவர் எனவும், நாம் தெளிவாக அறிகின்றோம். அறியவே, இவர் சோழ நாட்டவராயிருத்தல் கூடுமா? சோழ மன்னர் மரபினராயிருத்தல் ஒவ்வுமா? என்ற ஐயங்களும் கூடவே நம் மனத்துள் எழுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/14&oldid=707858" இலிருந்து மீள்விக்கப்பட்டது