பக்கம்:முல்லைக்கொடி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

அஞ்சும் கொடுமை யுடையதாக அது திண்மையுடன் வளரும். அதனை அஞ்சாது தழுவியடக்கி வெற்றி கொண்டவனுக்கே தம் மகள் மாலைசூடி மணந்து கொள்வதற்கு உரியவள் என்றும் அவர் அறிவித்து விடுவர்.

இவ்வாறு, ஒர் ஊரிலே கன்னியர் பலரும் காளையர் பலரும் மணம் நிகழும் காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பர். கார்காலந் தொடங்கியதும், ஆயர் எல்லாம் வீடு திரும்பி விடுவர். அப்போது, மணப் பருவம் உள்ள மகளிரை மணக்க விரும்பும் இளைஞர் ஏறுதழுவி வென்றி கொளும் ஆண்மையுடையவரானால் முன்வரலாம்!” எனப் பறையொலியோடு அறிவிப்பர்.

தனித்தனியே, "இன்னின்ன காளையைத் தழுவி வெல்பவன் இன்னின்னாரை மணந்து வாழும் உரிமை யுடையவன்" என்றும் அறிவிக்கப் பெறும். கொல்லேற்றைக் கண்டு அச்சம் கொள்பவர் பலரேனும், காதல் உள்ளம் கொண்ட இளைஞர் நிலை அவ்வாறு இருப்பதில்லை.

எவ்வாறேனும் குறித்த ஏற்றினை வென்று தத்தம் காதலியரை அடைய வேண்டும் என்ற தளராத ஊக்கம் அவர் உள்ளத்துள் எழும். இயல்பிலேயே உடல் வலிமிகுந்த ஆயர்குல இளைஞர் ஆதலாலும், ஏறு தழுவுதல் ஆயர்தம் குலமரபு என அறிந்து, தாமும் பலகால் அம்முறையிற் பயின்றவர் ஆதலாலும், அவர் உள்ளத்துள் கட்டுக்கு அடங்காத காதல் எழுந்து விளங்குவதாலும், கொல் லேற்றை எவ்வாறேனும் வென்று விடவேண்டும் என்ற ஆண்மையும் ஊக்கமும் முயற்சியும் அளவற்று அவர்பால் கிளர்ந்து எழும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/20&oldid=707864" இலிருந்து மீள்விக்கப்பட்டது