பக்கம்:முல்லைக்கொடி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

ஆசையும் ஆர்வமும் தோன்றவே, கானாற்றிலே -நீராடித், தெய்வங்களை வெற்றி வேண்டித் தொழுது, பன்மலர்க் கண்ணி சூடிச், செந்துவர் ஆடையணிந்து, துணிபுடன் ஏறு தழுவ முன்வருவர் ஆயர்குல இளைஞர். தம் காதலர் ஏறுதழுவ முன்வந்ததும், காதலியர் துடி துடிப்பர். என்னாகுமோ எனக் கவலையுறுவர். பரண்மேல் வீற்றிருக்கும் கன்னியர் பலரிடையே தன் காதலியையும், அவள் முகத்திலே தன் வெற்றி குறித்து ஒளிரும் ஆர்வத்தை யும் நோக்குவான் இளைஞன். அந்த அளவிலேயே, அப்போதே ஆயிரம் யானைப் பலம் அவனுக்கு உண்டாகி விடும். தொழுவினுள் குதித்து ஏற்றுடன் மற்போரிடுவான்.

சீறிவரும் கொல்லேற்றையும், எதிர்நிற்கும் இளை ஞனையும் கண்டு, ஆயர் எல்லாம் வாயடைத்து நிற்பர். ஐயகோ, இவன் நிலை என்னமோ? என்பாரும் பலர். ஆனால், அவன், அதோ! கொல்லேற்றின் கோட்டிடையே புகுந்து அதனைத் தழுவி வெற்றி கொண்டான் எனக் கண்டதும், அவன் காதலி அகமலர்ந்து களிப்பாள். களவுக் காலத்தே, தாயும் தந்தையும் சினந்ததும், ஊர் அலர் உரைத்ததும் கண்டு வெதும்பிய அவள், இனி அவர் என் செய்வர்? அவனையே நான் மணந்து தீரா இன்பத்தில் திளைப்பேனே! என இறுமாந்து விளங்குவள். அந்த இறுமாப்பு அவள் குறுகுறுத்த கண்களிலே நிழலாடும்.

தாம் வெல்லுதற்கு அரிது என வளர்த்த கொல்லேறு, இளைஞனின் வலிமைக்கு ஆற்றாது அடங்கி வலியழியக் கண்ட ஆயர், முதலில் ஓரளவுக்குக் கவலையுற்றாலும் பின்னர்த் தம் மகளின் திருமணம் அதனாற் கைகூடி விட்டது எனக் களிப்புடன் மகட்கொடையை அறிவிப்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/21&oldid=707865" இலிருந்து மீள்விக்கப்பட்டது