பக்கம்:முல்லைக்கொடி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

பெருமை யுடையவர் ஆயரும் என்பர் நல்லுருத்திரனார். குமரி முனைக்குத் தென்பால், நெடுந்தொலை நிலவிய நாட்டிற்கு உரியவனாகிய பாண்டியன், ஒரு காலத்தே அந்நிலப் பகுதியைக் கொடுங்கடல் கொள்ள, இழந்த தன் நிலப்பகுதிக்கு ஈடு செய்யும் பொருட்டுத், தன் அண்டை யில் இருந்த சேர சோழ நாடுகளின்மேற் படையெடுத்துச் சென்றான். அவ்வாறு, தென்னவன் படைகொண்டு, அப் பகுதிகளிற் பறந்த வில்லும் புலியும் நீக்கி, அங்கெல்லாம் கயற்கொடி நாட்டிச் சிறந்தான்்; அவன் புகழ் மீண்டும் பரவியது. அப்போது.அவனுடன் அவனுக்குத் துணையாக நின்று போராடி வெற்றி தேடித் தந்த துணைவர்களுள் ஆயர்கள் ஒருவர். அத்துணைப் பழைமையும் பெருமையும் உடைய நற்றமிழ்ப் பழங்குடியினர் என்று கூறுகின்றது, இம் முல்லைக் கலியுள் வரும் நான்காவது பாடல்.

தெய்வ நம்பிக்கை

ஆயர்கள் இயற்கையோடு கலந்த வாழ்வினர். இயற்கையோ, என்றும் ஒரே அளவாக நன்மையே விளைத்து நிற்பதில்லை. ஒரோஒருகால் இயற்கை தன் நிலை பிறழ்ந்தும் விடுவதுண்டு. ஆயரின் ஆற்றல் மிகுதி எனினும், அவர்க்கு அச்சந்தரும் செயல்களும் வியப்பூட்டும் செயல்களும் பல நிகழலாயின. அதனால், அவர் தம்மை அவற்றினின்றும் காப்பதற்காகத் தம்மிலும் பெருவலியுடைய சக்தியை வேண்டத் தலைப்பட்டனர். அதுவே படிப்படியாகத் தெய்வ வணக்கங்கள் ஆயரிடை நிலவுவதற்குக் காரணம் ஆயிற்று என்பர் ஆராய்ச்சியாளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/25&oldid=707869" இலிருந்து மீள்விக்கப்பட்டது