பக்கம்:முல்லைக்கொடி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

காதலன் கேட்குமாறு பாடி, அவனை ஊக்கப்படுத்துவதும் உண்டு. (பாடல் : 3)

மணஞ் செய்து தருவதாகப் பெற்றோர் உரைத்ததும், அவனுக்கு அவள்பால் என்றுமில்லாத ஓர் உரிமை வந்து விடுகிறது. அவள் ஆயத்துத் தன்னோடொத்த மகளிரோடு ஆடி மகிழ, அது கண்டு அவன் பொறாது உருத்து நோக்குவதும் உண்டு. (பாடல் : 4)

கணவன்மார் கொல்லேறு தழுவிப் புண்பட்டால், அதனைப் போற்றி, எவ்வாறு ஆயர் மகளிர் அணைத்து மகிழ்வர் என்பது குறித்துக் கன்னிப் பெண்கள் குரவையும் கூறிப் பாடுவது அவர் உளத்தின் பெண்மையை விளக்குவதாக அமைந்துள்ளது. (பாடல்:5)

இவ்வாறு, ஆடியும் பாடியும் களித்து வாழ்ந்தனர் ஆயர் எனின், அவர் உடல்நலம் மனநலம் பெற்றிருந்ததில் வியப்பேயில்லையன்றோ?

அணிகளும் ஆடைகளும்

ஆயர்குடிக் கன்னியர் காளையர் இருவருமே தம் கூந்தலை நறு நெய்யிட்டு நன்கு பேணி வளர்த்து வந்தனர். வெண்மை, செம்மை, நீலம் முதலிய பலநிற மலர்களால் மாலைகளைக் கட்டித் தம் கூந்தலில் அணிவது அவர்கட்கு வழக்கமாயிருந்தது. பிடவம், காந்தள், காயா, கொன்றை முதலிய நறுமண மலர்களை அவர்கள் சூடி மகிழ்ந்தனர். அதனால், அவர் கூந்தல் எப்போதுமே நறுமணங் கமழ்ந்து விளங்கும் என்பர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/30&oldid=707874" இலிருந்து மீள்விக்கப்பட்டது