பக்கம்:முல்லைக்கொடி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஒ. புலவர் கா. கோவிந்தன்

பறையொலி கேட்டும், எழும் புகை கண்டும் வெருவிய காளைகள், தொழுவுள், துள்ளிக் குதித்துத் திரிவதால் எழும் தூசுப் படலம் எங்கும் பரவின. அந்நிலையில், தம் குலமரபின் மாண்பினை மதித்துத், தம் காதலியர்க்குரிய காளைகளை அடக்கி, அவரை மணங்கொள்ள விரும்பிய இளைஞர்கள், தம் முயற்சியில் வெற்றி வாய்க்க வேண்டி, நீர்த் துறையிலும், ஆலடியிலும், மராமரத்திலும் கோயில் கொண்டிருக்கும் கடவுள்களை வணங்கி வழிபாடு ஆற்றிய பின்னர், ஆங்கு வந்து, அத் தொழுவுள் புகுந்தனர்.

விழாத் தொடங்கி விட்டது: தொழுவுள் புகுந்த ஆயர்குல இளைஞர்கள், தத்தம் காதலியர்க்கென விடப் பட்ட காளைகளைத் தேர்ந்து, எதிர்த்துப் போராடி அடக்கத் தலைப்பட்டனர். மரங்களில் உயர்ந்த கிளை களில் கூடு கட்டி வாழும் பட்டுப் புழுவின், கருமை கலந்த செம்மை நிறம் விளங்கும் காளை முன் சென்றான் ஓர் இளைஞன். கண்டாரைக் கலங்கச் செய்யும் கண் பார்வை கொண்ட அக் காளையை அஞ்சாது, அதன்மீது பாய்ந்து தாக்கினான். இளுைன் அடக்க அடங்கிவிட, அக் காளை ஆற்றலிற் குறைந்த தன்று. தன்மீது பாய்ந்த இளைஞனைத் தன் கோடுகளால், உயிரிழந்து போமாறு குத்தி வீழ்த்தி, வீழ்ந்த அவன் உடலைக் கோடுகளால் துரக்கி அலைக் கழித்தது. தன் மனைவி துரோபதையின் துரய கூந்தலைக் கையாற் பற்றி இழுத்த, பழியஞ்சாத் துச்சாதனனைப் போரிட்டு வென்று, நெஞ்சைப் பிளந்து, அவன் உடலைத் துரக்கிக்கொண்டு, அமர்க்களம் முழுதும் திரிந்து, தன் வஞ்சினத்தை நிலைநாட்டிய வீமசேனன் போலக் காட்சி அளித்த அக் காளையைக் கண்டு, விழாக் காண வந்திருந்தோர் கலங்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/48&oldid=707892" இலிருந்து மீள்விக்கப்பட்டது