பக்கம்:முல்லைக்கொடி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி ● 47

மலைப் பிளப்புக்களில் மலர்ந்த மணம் மிக்க மலர்களாலான அழகிய மாலை அணிந்து வந்த ஓர் ஆயரிளைஞன், நெற்றியில் வெண்திங்களை விரித்து வைத்தாற்போல், வெள்ளைச் சுழி விளங்கும் கரிய காளையை எதிர்த்தான்். எதிர்த்த இளைஞனைக் கீழே வீழ்த்தித் தன் கோடுகளைப் பாய்ச்சி, அவன் குடரைச் சரித்துக் குலைத்தது அக் காளை. உலக உயிர்களெல்லாம் ஒருசேர அழியும் ஊழி முடிவில், பசிய நிறம் வாய்ந்த பார்வதியைத் தன் ஒரு பாதியாகக் கொண்ட இறைவன், எருமை ஏறித் திரியும் கூற்றுவன் நெஞ்சைப் பிளந்து, அவன் குடரைக் கூளிக் கூட்டத்திற்கு இடுவான்போல் திரிந்த அக் கொல்லேற்றின் கொடுஞ்செயல் கண்டு, ஆங்கு வந்திருந்தார் குலை நடுங்கினர். -

இடையிடையே, நுண்ணிய செந்நிறப் புள்ளிகள் பொருந்திய வெண்ணிறக் காளை, ஆங்கு எழுந்த பறையொலி கேட்டும், விழாக் காண வந்து கூடிய பெருங் கூட்டத்தைக் கண்டும் வெகுண்டு நின்றது. அதன் கடுஞ்சினம் கண்டும் அஞ்சாது, அதன்மீது பாய்ந்து தாக்கினான் ஒர் ஆயன். வந்து தாக்கியவனை, அக் காளை, கீழே வீழ்த்தித் தன் கூரிய கோட்டால் அலைக்கழித்தது. தன் தந்தை துரோணாசாரியனைக் கொன்ற திட்டத் துய்மனைக் கொன்று பழி வாங்கக் கருதிப் போதற்கரிய இராக்காலம் எனவும் பாராது, கண்ணொளி பரவாக் காரிருளில் சென்று, தன் தோளாண்மையால் வென்று, அவன் தலையைத் திருகி எறிந்த அசுவத்தாமாப்போல், அவ்வாயன் உடலை அலைக்கழிக்கும் அக் காளையைக் கண்டு, ஆங்குக் கூடியிருந்த அனைவருமே அஞ்சினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/49&oldid=707893" இலிருந்து மீள்விக்கப்பட்டது