பக்கம்:முல்லைக்கொடி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ↔ புலவர் கா. கோவிந்தன்

ஏறு தழுவும் விழா, இவ்வாறு நடைபெற்றுக் கொண் டிருந்தது. ஆயரும், ஆயர் மகளிரும், அவ்விழாவைக் கண்டு, களித்தும், கலங்கியும் ஆங்கிருந்தனர். அவ்வாறு பார்த்திருந்தாரிடையே, அவ்வூர்த் தலைவன் மகளும், அவள் தோழியும் இருந்தனர்; ஆயர்கோன் மகள், தன் தந்தையை யொத்த தலைமைப் பாடுடைய பிறிதோர் ஆயர்கோன் மகன் மீது காதல் கொண்டிருந்தாள். ஆனால், அவள் காதலை அவள் பெற்றோர் அறியார்; அவள் தோழி ஒருத்திக்கு மட்டுமே அது தெரியும். தோழி அருகில் அமர்ந்து, அவ்விழாவைக் கண்டிருந்த அவள், குலமரபை யொட்டித், தன் பெற்றோர் தன் காதலனையும் ஏறுதழுவப் பணிக்க, தன்மீது கொண்ட காதலால், ஏறு தழுவ முனையும் அவனுக்கு, ஈண்டு ஏறு தழுவிய இளைஞர்க்கு உண்டானது போன்ற கேடு வாய்த்து விடுமோ என எண்ணிக் கலங்கினாள். அவள் உள்ளக் கலக்கத்தைக் கண்ட தோழி, "பெண்ணே! நம் காதலனுக்கு எவ்வித் இடையூறும் நேராது. ஆற்றல் மிக்க காளைகளையும் அடக்கி ஆள வல்லவன் அவன்!” எனக் கூறி, அவளைத் தேற்றினாள். அவள் அது கூறுங்கால், ஆங்குக் கூடியிருந்த ஆயர், தம் குழலில் மங்கலப் பண் ஒன்றை எழுப்பினர்; அக் குழலோசை கேட்ட தோழி, அதை அப் பெண்ணிற்குச் சுட்டிக்காட்டி, "தோழி! மார்பில் மாலை அணிந்து வந்து, நம் மனத்தை மருட்டும் நம் காதலன், நம்மை மணத்தல் உறுதி என நான் கூற, ஆயர் குழலோசை அதை உறுதி செய்யும் நன்னிமித்தமாய் அமைந்தது. ஆகவே, நீ சிறிதும் கவலாதே!" என்று கூறி, அவளைத் தேற்றினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/50&oldid=707894" இலிருந்து மீள்விக்கப்பட்டது