பக்கம்:முல்லைக்கொடி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி ஜ் 59

தலைவன் மகளுக்கு மணம் எனும் செய்தி கேட்டு மகிழ்ந்தனர்; மகிழ்ச்சி மிகுதியால் குரவைக் கூத்தாடத் தொடங்கினர்; அவர் ஆடும் அக்கூத்திற்குக், காளையை அடக்கிய இளைஞன், அவன் தலையிற் சூடிய கண்ணி, தோளின் திண்மை, அதன் ஆற்றல், பெற்ற வெற்றிச் சிறப்பு, கரிய மேனியோடும், கட்டிய செந்துவர் ஆடையோடும் காளையின் கழுத்தைக் கட்டிப் பிடித்த காட்சி, அவனுக்கு ம்னமாலை சூட்டப் போகும் தம்மூர்த் தலைவன் மகள், முறுவல் தோன்ற மலர்ந்திருக்கும் அவள் முகம், மெத்தனப் பருத்த தோள் ஆகியன பாடற் பொருளாய் அமைந்தன.

இவ்வாறு, அவனையும் அவளையும் இணைத்துப் பாடிக் குரவைக் கூத்தாடக் கண்டு மகிழ்ந்த அவ்வூர் ஆன்றோர், "அவர் இருவர்க்கும் இன்றே மணம் செய்து மகிழ்வோம்; மண முரசினை முழக்குங்கள்!” எனப் பணித்தனர்.

தம் மகளிரை மணக்க மனம் துடிக்கும் இளைஞர்க்கு ஏறுதழுவல் வழக்கம் இன்னல் பல தருகிறது என்பதை அறிந்தும், தம் குடிமுறையொடு முரண்பட விரும்பாத ஆயர்குலச் சிறப்பு, அம்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கா வகையில், காளைகளை அடக்கி ஆளும் ஆயர் குல இளைஞர்களின் ஆண்மைச் சிறப்பு, அவர் முயற்சியில் அவர் ஆற்றலுக்கு உரம் ஊட்டும் அவர் காதற் பெருமை, ஆடவர் உள்ளத்தில் காதல் கனலை மூட்டும் ஆயர் மகளிரின் அழகு, காதல் கட்டுக்கடங்காது பெருகிய காலத்தும், தம் காதலர், குடிமுறை குன்றாவாறு, காளைகளை வென்று வருதலை விரும்பி, அதுகாறும் காத்துக் கிடக்கும் அவர் கற்பின் பொற்பு ஆகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/61&oldid=707905" இலிருந்து மீள்விக்கப்பட்டது