பக்கம்:முல்லைக்கொடி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஆ. புலவர் கா. கோவிந்தன்

போரிடற்குத் தகுதியுடையவனல்லன்; இவனோடு இனியும் போரிடின் என் பேராண்மைக்கு இழுக்காம்!" என எண்ணி, அவனைப் பிழைத்துச் செல்ல விடுத்து, வேறிடம் போவது போல், வீழ்ந்த இளைஞனை வாளா விடுத்துச் செல்லும் அக் காளையின் பெருமிதம் கண்டு பலரும் பாராட்டினர்.

காளைகளின் கோடுகளைத் தம் மார்பில் தயங்காது தாங்கிக் கொண்டவர்களோடும், ஏறுகள் மீது பாய்ந்து ஏறியவர்களோடும், எருதுகளின் இரு கோடுகளுக்கிடையே பாய்ந்து புகுந்தவர்களோடும், இக் காளையை அடக்குதல் எமக்கு எளிது எனத் தம் வீரத்தை வாய் விட்டுக் கூறியவர்களோடும், ஏறுகளும் எதிர்த்துப் போரிட்டன. தம்மோடு போரிட வந்தாரை அழித்து, மதங்கொண்டு திரிந்த ஏறுகளை அடக்கியல்லது மீளேம் என வஞ்சினம் கூறி முன் வந்தனர் சில இளைஞர்கள். காளைகளின் ஆற்றலை முன்னரே அறிந்து அஞ்சிய ஆயர், அவ்விளைஞர் முன் சென்று அவரைத் தடுத்தனர். ஆயர் தடுக்க நில்லாது, அவர்களை மீறிச் சென்று, இளைஞர்கள் எருதுகளோடு போரிட்டு அடக்கினர். அந்நிகழ்ச்சியில் சிலர் எலும்பு முறிந்தது; சிலர் தசைகள் அற்று வீழ்ந்தன; புறத்தே பறை ஒலியும், அகத்தே ஏறுகளின் முழக்கொலி யும் ஒலிக்க, இடையே எலும்பும் தசையும் சிதறிக் கிடந்த அத்தொழு, தம்மைப் பகைத்துத் தம்மீது படையெடுத்து வந்த துரியோதனனையும், அவன் தம்பிமாரையும் தருமன் முதலாம் ஐவர் அழித்துக் கொன்ற பாரதப் போர்க்களம் போல் காட்சி அளித்துக் கண்டாரைக் கலங்கப் பண்ணிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/84&oldid=707928" இலிருந்து மீள்விக்கப்பட்டது