பக்கம்:முல்லைக்கொடி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இ. புலவர் கா. கோவிந்தன்

இளைஞன் அடக்கி விட்டான்; தத்தமக்குரிய காளைகள் கட்டித் தழுவப் பெற்றமை கண்டு ஏனைய மகளிர் கொண்ட மகிழ்ச்சியினும், அவள் கொண்ட மகிழ்ச்சி அதிகமாம். காரணம், எருதை அடக்கியவனை அவள் முன்னரே அறிந்திருந்தாள்; அது மட்டுமன்று; அவன்மீது காதல் கொண்டு, அவனோடு பழகி, அவன் அளிக்கும் மலர்சூடி மகிழ்ந்தவள் அவள். அதனால், அவன் ஆயர்குல வழக்கப்படி ஏறு தழுவ முன்வந்து, தனக்குரிய காளையைக் கட்டிப் பிடித்ததைக் காணவே, களிப்புக் கடலில் மூழ்கி விட்டாள்; காளையைக் கட்டிப்பிடித்து நிற்கும் காதலனையே இமை கொட்டாது நோக்கியிருந் தாள். அக்காட்சியைக் கண்ட தோழி, அவள் அருகில் அவள் அறியாவாறு சென்று, "தன் வெல்லும் புகழ் உலகெங்கும் விளங்குமாறு, எவராலும் அடக்க இயலாது எனக் கருதிய எருதை, எளிதில் அடக்கிப் புகழ்கொண்ட பொதுவனைப் பார்த்த கண்கள், என்றும் இமையாவோ?” என அவள் காதில், அவள் மட்டுமே கேட்குமாறு, மெல்லக் கூறி நகைத்தாள். -

தோழியின் நகைமொழி கேட்டு உணர்வு பெற்றாள் அப்பெண். அந்நிலையில் அப்பெண்ணின் உறவினர் சிலர், அவ்விருவர் இருக்கும் இடத்திற்கு அணித்தாக வருவதைக் கண்டாள் தோழி; அவள் குறும்புத்தனம் மீண்டும் தலை தூக்கிற்று. "பெண்னே! முன்னொரு நாள், நாம் நம் கூந்தலை விரித்துவிட்டு உலர்த்தி நின்றபொழுது ஆங்கு வந்த இவ்வுறவினர், உன் கூந்தல் எண்ணெய் மணம் மணப்பதற்கு மாறாக, காதலனோடு கொண்ட பழக்கம் காரணமாய், முல்லை மணம் மணப்பதை உணர்ந்தனர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/98&oldid=707942" இலிருந்து மீள்விக்கப்பட்டது