பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

189

அந்த நூலில் சேர்த்து இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.அந்தப் புலவர் காகினுாராகிய காயலை, வகுதை நன்னாட்டில் இருப்பதாகப் பாடியுள்ளார். களவியல் காரிகையைப் பதிப்பித்த பேராசிரியர் திரு. வையாபுரிப்பிள்ளை, "வகுதாபுரியை இக்காலத்தில் காயல்பட்டினம் என வழங்குவர்" என கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் முற்காலத்தில், வகுதாபுரி" எந்நாடுங்கொண்ட இறைவன் வச்சிரநாடான்” (கண்ணி-66) "மானாபரன் செய்ய வகுதாபதிக் கிறைவன்’" (கண்ணி-15) என பெரும் புலவர் உமறுகத்தாப் அவர்கள் வள்ளல் சீதக்காதி மரைக்காயரது திருமணக் கோலத்தைக் கண்ணாரக் கண்டு, களிகூர்ந்து, திருமண வாழ்த்து பாடும் பொழுது, வச்சிர நாட்டையும் வகுதையையும் குறிப்பிடுகிறார். இன்னும் சீதக்காதி "நொண்டி நாடக ஆசிரியரும்", 'வகுதையில் வாழ் மண்டலிகன்’

"திருவுலாவிய வகுதை நகர் வருகருணை வாருதி
"வகுதை நகர் சீதக்காதி... ... ...

என வள்ளல் சீதக்காதி மரைக்காயர் கீழக்கரை மாளிகையில் கொலுவீற்று சிறப்புற்று இருந்ததைப் பாடியுள்ளார்.

இவைகளுக்கு எல்லாம் மேலாக, காயல்பட்டினத்து புலவர் நாயகமான ஷெய்கு அப்துல் காதிரு நயினார் லப்பை ஆலிம் புலவர் அவர்கள் கீழக்கரை தான்” அந்த "காயல்" "வகுதை" என்பதை ,

"பவத்தடையறுத்து பலன்தருநெறியின்
"தவத்துறை பயிலுரு சான்றவர் வாழும்
வகுதை யம்பதியான் . . . . என்றும்,
"வையமெல்லாம் தனிக்கீர்த்தி வழங்கவருங்
கருணைமுகில் வகுதை வேந்தன்..."

என கீழக்கரை வள்ளல்கள் முகம்மது காசீம் மரைக்காயரையும், ஷெய்கு சதக்கத்துல்லா மரைக்காயரையும், புகழ்ந்துரைப்பதில் இருந்து கீழக்கரை தான் புலவர் நாவில் பொருந்திய வகுதை என்பது விளக்கமும் துலக்கமும் பெறுகிறது.

[1]


  1. புலவர் நாயகம் நிருபச் செய்யுட்கள் (ஹஸன் பதிப்பு) 1980 பக்கம். 65-66