பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

மதுரைச்சீமை வரலாற்று ஆசிரியருக்கு கிடைத்த ஆவணங்களின் படி ஹஜரத் அலியுத்தின் அவர்கள் கி பி. 1290ல் இறுதியில் மதுரை வந்தவர் என்பது மட்டும் புலனாகிறது.[1] இன்னொரு வரலாற்று குறிப்பிலிருந்து மதுரையின் தென் பகுதியில் உள்ள "காஜி மொகல்லா" என வழங்கப்படும் காஜியார் தெரு குடியிருப்பு ஏற்பட்டதும் அதனை ஏற்படுத்திய காஜி தாஜித்தீன் மதுரை வந்ததும் இந்த நூற்றாண்டில்தான் என்பது புலனாகிறது.[2] வைகையாற்றங் கரையின் தென்பகுதியில் ஏற்பட்ட இக்குடியிருப்பைப் போன்று வடகரையிலும் இஸ்லாமியரது குடியிருப்பு ஒன்று வளர்ச்சி பெற்றது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் டில்லியைக் கைப்பற்றி ஆட்சி செய்த முகம்மது கோரியின் பெயரால் கோரிப்பாளையம் என அந்த குடியிருப்பு இன்றளவும் வழங்கி வந்தாலும் அதனைத் தோற்றுவித்தவர் யார்? எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது? என்பதைத் தெரிந்து கொள்ள இயலவில்லை. அதே கால கட்டத்தில், தென்பாண்டிச் சீமையில் (இன்றைய நெல்லை, குமரி மாவட்டங்களில்) அரபு நாடுகளில் இருந்து ஏராளமான இஸ்லாமிய வணிகர்கள் தமது குடும்பங்களுடன் குடியேறினர். குறிப்பாக கிஸ்நாட்டு அதிபதி சையது ஜமாலுத்தின் தலைமையில் பல அரபுக்குடும்பங்கள் காயல் வந்து சேர்ந்தன[3]. இங்ஙனம் பன்னிரண்டாவது நூற்றாண்டின் முடிவிற்குள், அரபிய இஸ்லாமிய வணிகர்களும் தொண்டர்களும் தமிழகத்தை புதிய தாயமாகக் கருதி, குடியேறி, தங்கி, வாழ்ந்ததுடன் தமிழ் மக்களுடன் மண உறவுகள் கொண்டு தங்கள் சந்ததியினரைப் பெருக்கிக் கொண்டனர். இந்த தமிழ் மண்ணின் மைந்தர்களாகவே மாறி இருந்தனர். தமிழ்ச்சமுதாய அமைப்பில் கணிசமான எண்ணிக்கையுடன் அவர்கள் ஒரு புதிய அங்கமாக விளங்கினர். அதனால் அன்றைய ஆட்சியாளர் அவர்களை மதித்து சிறப்புடன் நடத்தினர்.


  1. Alexander Nelson – Manual of Madura Country Vol. II Part III Chap II p. p. 44—4
  2. Ibid p.p. 68, 69 9. Hussaini — Dr. S.A.O. - History of Pandiya Country (1962 р. 5)
  3. Hussain Nainar Dr - Arab Geographers knowledge abou South India (1942)