________________
சோழர் முன்னோர் இவன் முதலாகத் தொடர்ந்துவந்த சோழவமிசம், 13-ஆம் நூற்றாண்டு வரையில் பிரபலம் பெற்று, தமிழக மட்டுமன்றித் தெலுங்கு கன்னட நாடுகளையும் வென்று சோழ ஏகாதிபத்யத்தை நிலைநாட்டியது. விஜயாலயன் வழியில் வந்தவரான இச்சோழமன்னர்களை மூன்று தொகுதியினராகக் கொள்வது பொருந்தும். முதல் தொகுதியினர் புத்திர பௌத்திர பரம்பரையாக வந்த வர்கள். இரண்டு மூன்றாந் தொகுதியினர் தௌகித்திர முறையில் வந்தவர்கள். 1. புத்திர பெளத்திர பரம்பரையினரான சோழர் கள் : மேற்கூறிய விஜயாலய னுக்கு மகன், இராஜ கேசரி ஆதித்த சோழன் என்பவன். பரகேசரி , இராஜ கேசரி என்பவை பண்டைக்காலத்துச் சோழருள் இருவர் தரித்திருந்த சிறப்புப் பெயர்கள். இந்த இரண்டு பெயர்களும், பின்பு அவர்கள் வழியினர்க்கும் மாறி மாறி வழங்கலாயின. அஃதாவது, பரகேசரி என்பது முன்னோனுக்கானால் இராஜகேசரி என்பது அவன் பின்னோனுக்கு வழங்கும். இது விஜயாலயன் காலம் முதலாகவே தொடர்ந்து வழங்கியது. இச் சிறப்புப் பெயர்களைக் கொண்டு ஒரே பெயர் தரித்த சோழர்களை நாம் வேறுபடுத்தி நன்கறியலாகும். இம்முறையில், இராஜகேசரி என்ற பட்டந் தரித்த ஆதித்தன், தன் தந்தை விஜயாலயனினும் வலிமிக்கவனாய்த் தக்க சமயத்தில் பாண்டியருடன் சேர்ந்து கொண்டு, பல்லவர் களைப் போரில் வென்று, தன் முன்னோர் ஆண்ட சோழ நாட்டை முழுதும் மீட்டுக்கொண்டான். அதனோடு, தொண்டைநாட்டையும் சேரமான் உதவி பெற்றுத் தன் னடிப்படுத்தினான். இவனோடு பல்லவராதிக்கம் தமிழ் நாட்டில் ஒழிந்தது மட்டுமல்லாமல், அவர்கள் சிற்றரசர் களாகிச் சோழர்களுக்குக் கீழடங்கி ஒடுங்கவும் நேர்ந்தது.