பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 மூன்றாம் குலோத்துங்க சோழன் (3) ஈழநாடு கொண்டது (4) கருவூர் கொண்டது (5) கச்சி கொண்டது (6) மதுரையில் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் பண்ணியது என்பன. இனி, இவற்றை ஒவ்வொன்றாக நோக்கு வோம். (1) மதுரை கொண்டது :- வடக்கே வடுகரசரை வென்று அடிப்படுத்திய செயல் முடிந்ததும், குலோத் துங்கனது நாட்டம் தெற்கே பாண்டிய நாட்டின் மேற் செல்வதாயிற்று. இவன் தமையனான இராஜாதிராஜனது ஆட்சிக்காலத்தில், பாண்டியர்க்குள் நிகழ்ந்த கலகங் களும் போர்களும் இருமுறை சோழ சேனாதிபதிகளால் அடக்கப்பட்டனவன்றோ ? அவற்றுள் முதலாம் போர் குலசேகர பாண்டியனுக்கு உதவியாகப் பெருமானம்பிப் பல்லவராயர் பெரும்படையுடன் சென்று அப்பாண்டிய னது விரோதியான வீரபாண்டிய னுடனும், அவனுக்கு உதவியாக வந்த ஈழப்படையுடனும் நடத்தியது. இரண் டாம் போர், சோழவேந்தன் செய்த நன்றியை மறந்து குலசேகர பாண்டியன் சிங்கள வேந்தனுடன் சேர்ந்து செய்த சூழ்ச்சி காரணமாக விளைந்தது. இந்த இரண்டு யுத்தங்களிலும், பல்லவராயரிருவரும் பெற்ற வெற்றிகள் முன்பே விரித்துரைக்கப்பட்டன. இனி , குலோத்துங்கன் பட்டம் பெற்றதும் மேற் கூறிய பாண்டிய நாட்டுக் கலகம் மறுபடியும் தொடங் கியது. சோழர் செய்த உதவியை மறந்து துரோகம் செய்த குலசேகர பாண்டியன், நிலைமை குலைந்து சில காலத்தில் இறந்துவிட, அவன் மகனான விக்கிரம பாண்டியன் புதிதாகப் பட்டம் பெற்ற குலோத் துங்கனைச் சரணமடைந்தனன். சரணம் புகுந்த