________________
35 போர்ச் செயல்கள் கொண்டருளிய " என்று சாஸனங்கள் கூறும் விசேட ணம், குலோத்துங்கனது கருவூர் விஜயத்துக்குப் பின்அஃதாவது அவனது 16-ஆம் ஆட்சியாண்டுக்குப் பின்பு அச்சோழன் பெற்ற தனிவெற்றியாகக் கருது வதே பொருத்தமாகின்றது. இவ்வாறு கச்சியைக் கைக்கொள்ள நேர்ந்தது எக்காரணம்பற்றி என்பதைத் தெளிவாக அறிய இட மில்லை. தெலுங்கு நாட்டில், நெல்லூர் கடப்பை முதலிய வற்றை ஆண்டுவந்த வடுகரசர்கள், குலோத்துங்கன் ஆட்சிக்கு அநுகூலர்களாயிருந்தவர்களே என்பது, அந் நாட்டுள்ள கல்வெட்டுக்கள் பலவற்றால் விளக்க மாகின்றது. அதனால், நம் சோழனது ஆட்சி முழு வதிலும் அவ் வடநாடு உட்பட்டிருந்ததெனலாம். ஆகவே, கச்சியை வேற்றரசர் கைப்பற்றி நெடுங்காலம் ஆண்டனர் என்று கொள்ள இடமில்லை. ஒருகால், நெல்லூர் கடப்பைகளிலிருந்து ஆண்டுவந்த தெலுங் கரசர்கள், குலோத்துங்கன் தென்னாட்டுப் போர்களில் மூண்டுநின்ற காலத்தில், கச்சியிற்புகுந்து கலகம் விளைக்க, அப்போது தன் படையை விடுத்து அவர்களை அடக்கி அந் நகரையும் கைக்கொண்டதாகலாம். இக்கருத் தைக் கடப்பைப் பக்கத்திலே மகாராஜப்பாடி என்ற நாட்டை நம் சோழன் காலத்தில் ஆண்டுவந்த தெலுங்கு சோடனான நல்லசித்தன தேவன் என்பவன், கச்சியி லிருந்து பிற அரசரிடம் தான் கப்பம் பெற்றுவந்ததாகப் பெருமைபாராட்டிக் கொள்ளுதல் வலியுறுத்துகின்றது. இது எவ்வாறாயினும், இக்கச்சிவெற்றி தன் ஆணைக்கு அடங்காதாரை அடக்கிவர நம் சோழன் விடுத்த சிறு படையெடுப்பின் பயனே எனலாம். இது, இவன் சாஸ னங்கள் பலவும் இச்செயலை விசேடித்துக் கூறாமல் நெகிழ விட்டிருப்பதனால் அறியப்படுகின்றது.