பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அச்சான தாளை எடுத்தலும் நிகழ வேண்டும். பதட்டமில்லாமல், விரியும் நேரத்திற்குள் இடது கை தாளை எடுக்க வலது கை தாளை வைக்க, அச்சுப்பொறியின் இருபகுதிகளும் இணைந்து அச்சிட, மீண்டும் விரிய இவ்வாறு தொடர்ந்து அச்சிடுதல் நடைபெறும். ஒவ்வொரு முறையும் தாள் வைக்கும்போது, தாளின் மையப்பகுதி சிறிது வளைந்து குவிந்தபடி எடுத்துச் சென்று குண்டூசிகளில் சரியாகப் படியச் செய்து அப்படிப் படியும்போது விரியுமாறு வைத்துக் கையை எடுத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் அணைப்பு விலகாமல் ஒவ்வொரு படியும் ஒழுங்காக அச்சாகும்.

உருளையச்சுப் பொறி (Cylinder) இயங்கும் முறை

உருளை யச்சுப் பொறி என்பது, கீழே கோப்புப் பொருள் ஒரு தட்டில் (plate) முடுக்கப் பெற்றிருக்கும். மேலே உள்ள உருளையில் தாள் சுற்றிக் கொண்டு வந்து எழுத்தின் மீது படிந்து அச்சாகும்.

உருளை யச்சுப் பொறிகள் பல அளவுகளில் வருகின்றன. டெம்மி, டபுள் கிரெளன், டபுள் டெம்மி, டபுள் கேப், போன்ற அளவுகளில் இந்தப் பொறிகள் செய்யப்படுகின்றன. இவை மின்னாற்றலால் இயக்கப்படுகின்றன. கையினால் தாள் ஊட்டப் பெறுபவை, தானியங்கி முறையில் தாள் எடுத்துக் கொள்ளுபவை என இரு வகைப் பொறிகள் உள்ளன.

இவ்வச்சுப் பொறியின் கீழ்ப்பகுதி ஒரு நீண்ட தட்டாக அமைந்துள்ளது. இத்தட்டில் முன் பாதிப் பகுதி அடி மட்டம் தாழ்வாக உள்ளது. அது தான் கோப்புப் பொருள் வைக்கும் தட்டு (Matter plate). சற்று உயர்ந்துள்ள பகுதி மைத்தட்டு (Ink plate). இது முன்னும் பின்னும் போய்ப் போய் வரும். இதன் அடியில் உள்ள இருப்புத் தண்டு இதை முன்னும் பின்னும் போய் வரும்படி இயக்குகின்றது.