பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


என்றாலும் பத்துப் படிவத்துக்கு மேற்பட்ட நூல்களுக்கு இந்தத் தையல் முறையே சிறந்தது.

படிவங்களைப் புத்தகங்களாகக் கோத்து எடுத்த பிறகு, சுமார் ஐநூறு படிவங்கள் கொண்ட ஒரு கட்டை எடுத்து நன்கு அழுத்திச் சணல் கயிற்றால் நான்கு புறமும் கட்டிக் கொள்ள வேண்டும். இந்தக் கட்டை முதுகுப்புறம் மேல் இருக்கும்படி தரையில் அல்லது மேசையின்மேல் வைக்க வேண்டும்.

முதுகுப் புறத்தில், நீண்ட சட்டம் ஒன்றை வைத்து, நீளமாக முதுகுகளின் மேல் குறுக்கு வாட்டில் நான்கு கோடுகள் போடவேண்டும். இந்த நான்கு கோடுகளும், புத்தகத்தின் முதுகுப்புறத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கும். இதில் நடுப்பகுதி சிறிது அகலமாகவும், ஓரப் பகுதிகள் இரண்டும் சற்று நெருக்கமாகவும் இருக்க வேண்டும். இந்த நான்கு கோடுகளின் மீதும் குத்தூசியால் அழுத்திக் கீறல் போட்டுக் கொள்ள வேண்டும். இந்தக்கீறல், கோடு போட்ட இடங்களில் தாளை அறுத்துத் துளையுண்டாக்கும் அளவு போடப்படவேண்டும். நான்கு கோடுகளின் மீதும் நன்றாகக் கீறிவிட்ட பின், கட்டை அவிழ்த்து வைத்துக் கொண்டு தைக்கத் தொடங்க வேண்டும்.

500 படிவங்கள் கொண்ட ஒரு கட்டை எடுத்து, முதுகுப் புறம் மேலாக இருக்கும்படி எதிரில் மேடை போல் போட்டுக் கொள்ள வேண்டும். தலைக்கு மேலே ஓர் ஆணியில் முடி போட்டு, முதுகுநூல் இரண்டைக் கீழே கொண்டு வந்து நடுக்கீறல் இரண்டுக்கும் நேராக வரும்படி, படிவக்கட்டின் பக்கச் சணலுடன் சேர்த்துக் கட்டிவிட வேண்டும். இந்த முதுகு நூலை ஒட்டினாற் போல், இரு படிவங்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்,