பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


அட்டைகளையும் விலக்கி வைத்து காலிகோவை 4 புறமும் மடித்து விட வேண்டும். நடு இடை வெளியில், முதுகு விரைப்பாக இருப்பதற்காக ஒரு வெள்ளை அட்டைத்துண்டை ஒட்டிவிட வேண்டும். இந்த காலிகோ அட்டை காய்ந்த பிறகு, புத்தகத்தின் பக்கத்தாள்களில், மேல் தாளிலும் அடித் தாளிலும் பசையைத் தடவி, காலிகோ அட்டையை இரு புறமும் மேலே ஒட்டிவிட வேண்டும்.

அழுத்தத்தில் காயவைத்து மறுநாள் எடுத்தால் புத்தகம் பொலிவோடு இருக்கும். இதற்கு மேல் மடிப்புறை (Jacket) போட்டு, கட்டுக்கட்டி புத்தகங்களை வாடிக்கையாளரிடம் ஒப்படைத்து உரிய கூலியைப் பெற்றுக் கொள்ளலாம்.

மடல் கட்டு

மடல்தாள் நூறு கொண்டது ஒரு கட்டு (Pad). நூறு தாள்களாகப் பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு நூறுக்கும் அடியில் ஒரு பழுப்பு அட்டை வைத்து, தலைப்பக்கத்தை ஒரே சீராகத் தட்டி, அல்லது வெட்டு பொறியில் வைத்துச் சிறிதளவு வெட்டிவிட்டு, கட்டி, தலைப்பக்கத்தின் மீது வச்சிரம் தடவிக் காய வைக்க வேண்டும். காய்ந்தபின் ஒவ்வொரு கட்டிலும் அடியில் உள்ள அட்டையின் தலைப் பக்க அடியில் கெட்டியான தாள் ஒன்றை ஒட்டித் தலைப் பக்கமாக வளைத்து முன்பக்கம் கொண்டுவந்து மூட வேண்டும். இப்படி எல்லாக் கட்டுகளும் மேல்தாள் ஒட்டிய பின் மீதி மூன்று பக்கங்களையும் சீராக வெட்டிவிட வேண்டும்.

பட்டியல் புத்தகம்

ஒரு பட்டியல் புத்தகம் 3 படிகள் கொண்டது என்று வைத்துக் கொள்வோம். 10 புத்தகங்கள் செய்ய வேண்டும் என்றால், முதலில் வரிசை எண் குத்திக் கொள்ள வேண்டும். ஒன்று முதல் ஆயிரம் வரை தனித்தனியே மூன்று படிகளிலும் குத்திக் கொள்ள வேண்டும்.