பக்கம்:மூவரை வென்றான்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

101

"ஐயோ...அம்மா... – அலறிக்கொண்டே பல்டியடித்துக் குப்புற விழுந்து செம்மண்ணில் புரண்டான் அவன். அவ்வளவுதான்! பொத்தென்று தலையிலிருந்த பருத்தி விதை மூட்டையைக் கீழே தள்ளிவிட்டுப் பாய்ந்து, பாய்ந்து சிலம்பக் கழியைச் சுழற்றினார் ஐயர். ஒளிந்துகொண்டிருந்த மற்ற அம்பலகாரர்களும் திமுதிமுவென்று ஒடி வந்து கூட்டமாக அவரை வளைத்துக்கொண்டார்கள். வளைத்துக் கொண்டு சும்மா நிற்க முடிந்ததே ஒழிய, அவரை நெருங்க முடியவில்லை. மின்சார விசிறி-பெரிதாக இந்தக் காலத்தில் ஆகாய விமானங்களின் முன்புறம் சுழலுமே, அதுமாதிரி நாற்புறமும் சுழன்றது அவருடைய சிலம்பக் கழி. நான்கு பக்கமும் கத்தி, பிச்சுவா, ஈட்டி, பாலாக்கம்பு சகிதம் அவரை வளைத்துக்கொண்டு நின்றவர்கள் பதினைந்து இருபதடி தூரம் தள்ளி நிற்க முடிந்ததே தவிர, அவரைக் கிட்ட நெருங்க்வே முடியாமலிருந்தது.

பொழுது விடிகிற வரையிலும் அவர் அப்படிச் சிலம்ப மாடித் தடுத்தாலும்கூட அவரைத் தீர்த்துக் கட்டாமல் போவதில்லை என்று அம்பலகாரர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். கொஞ்சம் கைகள் ஒய்ந்தோ, அசந்தோ, அவர் சிலம்பக் கழியைக் கீழே போட்டால் போதும். அவ்ர் மேற்பாய்ந்து கொல்லச் சுற்றிலும் நாற்பது ஐம்பது பேர் கத்தி கபடாக்களோடு காத்திருந்தனர். ஒன்று, இரண்டு, மூன்று என்று நாழிகைகள் கழிந்துகொண்டே இருந்தன. இரவு நடு ஜாமத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. ஐயர் ஆட்டத்தை நிறுத்தவே இல்லை. ஆட்டத்தை நிறுத்தினால், கழுத்தை அல்லவா நெரித்துவிடுவார்கள்.

நல்லவேளை இதற்குள் நதிக்குடியில் அவர் தம்பி ராஜுவையர் 'கண்டிப்பாக இரவு வந்துவிடுவேன்' என்று சொல்லிவிட்டுப் போன அண்ணாவை நள்ளிரவு வரை காணாததால், சந்தேகமுற்றுக் கத்திக் கம்புகளுடன் ஊர் ஆட்கள் ஐம்பது, அறுபது பேரைத் திரட்டிக்கொண்டு தலைவெட்டிப் பள்ளத்துக்கு வந்துவிட்டார்.