பக்கம்:மூவரை வென்றான்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

53


“உள்ளே இருட்டாக இருக்கிறது தேவரே! எதுவும் துஷ்ட மிருகங்கள் பதுங்கியிருந்தாலும் தெரிந்து கொள்வ. தற்கில்லையே’’ என்று குகைக்குள் துழைவதற்குத் தயங்கினேன் நான்.

“சந்தேகம் எதற்கு? அதையும்தான் பார்த்துவிடுவோமே!” என்று கூறிக்கொண்டே, குகையை நோக்கித் துப்பாக்கியால் ஒரு முறை சுட்டார் ஜான்ஸ்ன். துப்பாக்கி ரவை பாறையில் மோதி எதிரொலித்ததே தவிர, வேறு எவ்விதச் சலனமும் குகைக்குள் இல்லை.

“இப்போது உங்களுக்குச் சந்தேகம் இல்லையே?” - தேவர் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே கேட்டார். நான் சம்மதத்திற்கு அறிகுறியாகத் தலை அசைத்தேன். மூவரும், வேட்டையாடிய மிருகங்கள், உடன் கொணர்ந் திருந்த மற்றச் சாமான்கள் சிகிதம் குகைக்குள் நுழைந்தோம். சிகரெட் பொருத்திக் கொள்வதற்காக ஜான்ஸன் கொணர்ந் திருந்த தீப்பெட்டிைைய வாங்கிய தேவர், குகையில் அங்கங்கே கிடந்த சுள்ளிகளைத் துழாவி எடுத்து நெருப்பு மூட்டினார். குகைக்குள் வெளிச்சம் பரவியது.

தேவரும் ஜான்ஸனும் வேட்டையாடி வந்திருந்த மிருகங்களின் உடல்கள் அந்த வெளிச்சத்தில் பயங்கரமாகக் காட்சியளித்தன.

நான் அத்தக் குகைக்குள் உலாவிக் கொண்டே, அதைச் சுற்றி ஒரு கண்ணோட்டம் விட்டேன். தெற்கு வடக்காக அமைந்திருந்த அந்தக் குகைக்குத் தென்புறம் வாயில் இருந்தது. குகையின் வடகிழக்குப் பக்கத்துப் பாறை ஒன்றின் மேல் சென்ற என் பார்வை, அப்படியே அந்தப் பாறையில் நிலைத்தது. ஒருகணம் நான் அப்படியே திகைத்து நின்று விட்டேன். மெல்ல நின்று நிதானித்து, ஊன்றிப் பார்த்த போதுதான் அந்தப் பாறையின் மேல் நிற்பது சிலை என்று புரிந்துக் கொள்ள முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/55&oldid=509513" இலிருந்து மீள்விக்கப்பட்டது