பக்கம்:மூவரை வென்றான்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

73

மாடிக்குச் செல்லும் கதவு வெளிப்பக்கம் தாழ்போடப் பட்டிருந்தது. உட்புறமிருந்து யாரோ பலங்கொண்ட மட்டும் கதவைத் தட்டிக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தார்கள்.

கையில் கொண்டுவந்திருந்த கொள்ளைப் பொருள்கள் அடங்கிய மூட்டையை உடைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டிக்கருகில் போட்டுவிட்டு, ஒடிப்போய் மாடிக்குச் செல்லும் கதவின் வெளிப்புறத்துத் தாழ்ப்பாளை நீக்கித்திறந்தார் மாமன். வெள்ளையத் தேவன் தூணில் கட்டப் பட்டிருந்த காவலர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.

மாடிக் கதவை மாமன் திறந்ததும், பண்ணைத் தேவர், அவர் மனைவி, மகள் பொன்னி மூவரும் உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப்போய்க் கீழே இறங்கினார்கள்.

அவர்களை ஆசுவாசப்படுத்தி அமர்த்தி, நடந்த கதையை எல்லாம் மாமனும் வெள்ளையத் தேவனும் கூறினார்கள். இதற்குள் பொன்னியும் அவள் தாயுமாகச் சேர்ந்து வெள்ளையனால் தூணிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த காவற்காரர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கத்தைப் போக் கினர்.

அப்போது மாமன் வெள்ளையத் தேவனுக்குக் காதில் ஏற்பட்ட காயத்தைப் பண்ணைத் தேவரிடம் கூறி ‘கொஞ்சம் தேங்காய் எண்ணெயும் கரித் தூளும் வேண்டும்'—என்று கேட்டார்.

பொன்னியின் கலங்கமற்ற முகத்தையும், தெய்வீக அழகையும் பார்த்துக்கொண்டிருந்த வெள்ளையத் தேவன், “ஆகா! ஒரு பாவமுமறியாத இந்தப் பேதைப் பெண்ணைக் கடத்திக்கொண்டு போகவேண்டுமென்று நினைத்தோமே? எவ்வளவு பெரிய பாவத்திலிருந்து கொள்ளைக்காரர்கள் மூலம் கடவுள் நம்மைக் காப்பாற்றியிருக்கிறார்!"—என்று தனக்குள் எண்ணிக்கொண்டான். காவற்காரர்கள் மூட்டையைப் பரிசோதித்துத் திருடு போனவை எல்லாம் மீண்டுவிட்ட தாகக் கூறினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/75&oldid=508105" இலிருந்து மீள்விக்கப்பட்டது