பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (3) சுந்தரமூர்த்தி அடிகள் 1O9 வரையின் மடமகள் கேள்வன் வானவர் தானவர்க் கெல்லாம் அரையன் இருப்பதும் ஆரூர்.அவர் எம்மையும் ஆள்வரோ கேளிர். (1) என்பது. இந்தத் திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டு திருக்கோயில் வாயிலை அணுகினார். சிவனடியார்கள் வீற்றிருக்கும் தேவாசிரிய மண்டபத்தைக் கைகூப்பித் தொழுதார். புற்றிடம் கொண்ட பெரு மான் எழுந்தருளிய திருமூலட்டானத்தைச் சூழ்ந்த திருவாயிலை இறைஞ்சி உள்ளே புகுந்தார். செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளார் மலர் தூவி வழிபாடு செய்யத் திருவருள் புரிந்த பூங்கோயில் அமர்ந்த பெருமான் சேவடிகளை உளங் குளிர இறைஞ்சியதனால் உண்டாகின்ற இன்ப வெள்ளத்திலே மூழ்கி நின்று இன்னிசைத் தமிழ் மாலையினைப் பாடிப் போற்றினார். அப்பொழுது அனைவரும் கேட்கும் படி வானில், 'நம்பியாரூரனே, தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம். நீ எம்மால் தடுத்தாட் கொள்ளப் பெற்ற அந்நாளில் நீ கொண்ட திருமணக் கோலத்தையே எப்பொழுதும் மேற்கொண்டு இந்நில உலகில் இன்புற்று வாழ்வாயாக’ என்றதோர் அருள்மொழி எழுந்தது. அவ்வருள் மொழியைக் கேட்ட சுந்தரர், "அடியேனைத் தடுத்தாட்கொள்ள வந்த மறையவனே, ஆரூரமர்ந்த அருமணியே. நாயினும் கடையேனாகிய எளியேனையும் பொருளாகக் கொண்டு நின் திருவடித் தாமரையினைத் தந்தருளியது, நின் பெருங்கருணைத் திறமல்லவா?' என்று கூறிப் புற்றிடங் கொண்ட பெருமானைப் பல முறையும் வணங்கிப் போற்றினார். வீதிவிடங்கப் பெருமானாகிய தியாகேசர் திருமுன்பு சென்று தொழுது திருமாளிகையை வலஞ் செய்து போந்தார். அன்று முதல் அடியார்களெல்லாம் அவரைத் தம்பிரான் தோழர் என அன்பினால் வழங்கிப் போற்றுவாராயினர். இறைவன் பணித்த வண்ணம் நம்பியாரூரர் திருமணக் கோலப் பெருமாள் என்று போற்றும் வண்ணம் சுந்தர வேடங்களையுடைய தவ வேடராய்ப் பூங்கோயிலமர்ந்த பெருமானை நாடோறும் வழிபட்டு இன்னிசைப் பாமாலையைப் பாடி மகிழ்ந்திருந்தார்.