பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை (டாக்டர் பிரமீளா குருமூர்த்தி இந்திய இசைத்துறை செ.ப.க) பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அவர்கள் அயராது பல நூல்கள் படைத்துள்ள சிறந்த அறிஞர் பெருமகனார் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியராகத் தமிழ் இலக்கியத்துறையிலும், தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மரபு வழிப் பண்பாட்டு நிறுவனத்தின் மதிப்பியல் இயக்குநராகவும் அருந்தொண்டாற்றியவர். இவரது தனித்திறமை யாதெனில் சொற்பொழிவுகளை எல்லாம் நூலாக்கும் பணி என்ற அரும் சாதனையாகும். 2002-2003ம் ஆண்டு மறைமலை அடிகள் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள அறக்கட்டளை சொற்பொழிவுகளை இவர் ஆற்றினார். 'மூவர் தேவாரம்' என்ற தலைப்பில் இவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளைப் பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி அவர்களுக்கு அன்புப் படையலாக சமர்ப்பித்துள்ளமை போற்றற்குரியது. தென்னக இசை வரலாற்றில் தோன்றிய பாடல் வரிசையில் பண் மற்றும் தாளத்துடன் உருவான முதல் இசைப்பாடல்கள் தேவாரங்கள் என்று பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளது இங்கு நினைவு கூரத் தக்கது. 'மூவர் - தேவாரம் புதிய பார்வை' என்று சிறப்பான தலைப் பிட்டு திருமுறைகண்ட சோழனான இராஜராஜ சோழன் மற்றும் நம்பியாண்டார் நம்பி ஆகியோரின் திருப்பணி பற்றியும் தேவாரங்களை அவர்கள் முதல் மூன்று நான்கு ஐந்து ஆறு மற்றும் ஏழு என்று சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடல்கலைத் தொகுத்தமையைச் சிறப்பாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து நாலாயிரம் தொகுக்கப்பட்டுள்ள முறையை யும் சீராக வழங்கியுள்ளார். சைவ வைணவ பேதமின்றி இலக்கியப் பொக்கிஷங்களாக விளங்கும் பண்டைய சீர்மை பெற்ற பக்திக் காப்பியங்களை இவ்வாறு ஆய்வு நோக்கில் வழ்ங்கியமை பேராசிரியரின் புதிய கண்ணோட்டத்தைக் காட்டுகிறது. அவர்தம் ஆழ்ந்த அறிவைப் புலப்படுத்துகிறது வாரப் பாடல், தேவ பாணி ஆகியவற்றிற்குச் சிறப்பான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.