பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii திருஞானசம்பந்தர் சீரிய வாழ்வில் நிகழ்ந்த அரிய நிகழ்வுகள் அற்புதமாகப் பாடிய பதிகங்கள் இவற்றை விளக்கங்களுடன் அளித்துள்ளமை பாராட்டத்தக்கது. சைவத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஒப்பற்ற சேவை செய்த சம்பந்தப் பிரான் 7ஆம் நூற்றாண்டிலேயே சாதி வேற்றுமை பாராட்டாது திருநீலகண்ட யாழ்ப்பாணரைச் சிறந்த முறையில் தன்னுடன் சீடராகப் போற்றிய பாங்கு அக்காலத்தில் சிறந்து விளங்கிய சமூக நாகரிகத்துக்குச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு. பதினாறு வயதுவரை வாழ்ந்தாலும் சம்பந்தரின் சீரிய வாழ்வும் அவரது அரிய ஆற்றல் தோய்ந்த பாடல்கள், பண்ணிற்கும் தாளத்திற்கும் பாடல் நயத்துக்கும் சந்தங்களுக்கும் எடுத்துக் காட்டாய்த் திகழ்வன. இவற்றையெல்லாம் சிறப்பாக உயர்திரு சுப்புரெட்டியார் தமிழ் கூறு நல்லுலகத்திற்குப் படைத்திருக்கும் ஆற்றல் போற்றத்தக்கது. இது போலவே அப்பர் பிரான் மற்றும் தம்பிரான் தோழர் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளையும் பாடல் களையும் பெரிய புராணச் செய்திகளுடன் சேர்த்துத் தருகிறார். இதனைத் தொடர்ந்து பண்களைப் பற்றிய விரிவான செய்திகள் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு திருமுறை வாரியாகப் பண்கள் சுட்டிக்காட்டப் பெற்று பாடல் வகைகளும் விளக்கப்பட்டுள்ளன. வடமொழி மற்றும் தமிழில் உள்ள இவரது திறனாய்வு வடமொழி யாப்பியத்தின் மரபு எனும் பகுதியில் சிறப்பாக வெளிப்படுகின்றது. கட்டளை எனும் பகுதியில் இவர் தரும் விளக்கங்கள் ஆய்வாளர்களுக்குப் பெரும் விருந்தாக அமைகின்றன. மொத்தத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் சீரிய ஆய்வுக் கட்டுரைகளாக எழுத்து வடிவம் பெற்று நூலாக மாறி யுள்ள தன்மை கடும் முயற்சியின் விளைவு மட்டும் அன்றி அவரது தெளிந்த ஆழ்ந்த உழைப்பின் மேன்மையைப் பறைசாற்றும். வாழ்க அவர்தம் பணி. இந்திய இசைத்துறை - பிரமீளா குருமூர்த்தி சென்னைப் பல்கலைக்கழகம் சேப்பாக்கம், சென்னை - 600 005