பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 மூவர் தேவாரம் - புதிய பார்வை என்று வரும் திருப்பாடல்களில் (1.2) இறைவனுடன் தமக்குள்ள தோழமைத் திறம் விளங்கும்படியும் கண்ணைத் தரும்படியும் போற்றி இறைஞ்சுதலைக் காணலாம். உள்ளத்தை உருக்க வல்ல இத்திருப்பதிகத்தைக் கேட்டருளிய திருவாரூர்ப் பெருமான் திருவுள்ளமிரங்கித் தம்பிரான் தோழருக்கு வலக்கண்ணையும் கொடுத்தருள்கின்றார். இரு கண்களையும் ஒருங்கே பெற்ற நம்பியாரூரர் பூங்கோயிலமர்ந்த பெருமானின் திருமேனியைப் - பருகா இன்னமுதத்தைக் - கண்களால் பருகு கின்றார். ஆடிப் பாடித் துதித்துப் பேரின்ப வெள்ளத்தில் திளைத்து மகிழ்கின்றார். பின்பு தேவாசிரிய மண்டபத்திற்குப் போந்து அடியார்களுடன் அங்குத் தங்கியிருக்கின்றார். (15) ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்குற்ற பிணி தவிர்த்தல்: ஏயர்கோன் கலிக்காமர் காவிரியின் வடகரைக்கும் கீழ்பால் திருப்பெருமங்கலம் என்னும் பதியில் வளவர் சேனாபதிக் குடியாகிய ஏயர்கோன் குடியில் தோன்றியவர். சிவபிரானுக்கு வழி வழித் தொண்டர். சிவனடியார்களுடனும் ஆராக் காதல் கொண்டு அவர்களின் பணியையும் போற்றுபவர். இப்பெரிய சிவத்தொண்டர் தம்பிரான் தோழர் பரவையாரின் ஊடல் தீர்த்தற் பொருட்டு சிவபிரானை இருமுறை தூதனுப்பிய செய்தியைக் கேள்வியுற்று உளம் வெதும்பி வருந்துகின்றார். அருள் காரணமாக இறைவன் தூது செல்ல இசைந்தாயினும், அடியான் ஒருவன் அவரை அங்ங்னம் ஏவுதல் முறையன்று என்பது இவர் கருத்து. சிவனடியாராகிய ஏயர்கோன் கலிக்காமர் தம்மிடத்துச் சினம் கொண்டிருத்தலை அறிகின்றார் நம்பியாரூரர். தாம் செய்தது பெரும் பிழை என்பதை உணர்கின்றார். கலிக்காமர் தம் மீது கொண்டிருக்கும் செற்றத்தைப் போக்கியருளுமாறு சிவபெருமானைப் பலமுறை வேண்டுகின்றார். அன்பினால் அவ்விருவரையும்