பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 139 பதிகங்கள் பழந்தக்கராகப் பண்ணமைந்த பதிகங்களை அடுத்து வைக்கப்பெற்றன. இனி, பண்டைத் தமிழ்ச் சான்றோர்கள் நானிலத்து ஐந்திணை யொழுக்கங்களுக்குச் சிறப்புடையனவாகப் பகுத்துரைத்த பழைய தமிழ்ப் பண்களுள் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகங்கள் தக்கேசிப் பண்அமைந்த பதிகங்களைச் சார வைக்கப்பெற்றன. குறிஞ்சியொடு பெயர் ஒற்றுமையுடைய பண்கள் வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி என்பனவாகும். இவ்விரு பண் களிலும் அமைந்த பதிகங்கள் குறிஞ்சிப் பண்ணுக்குரிய பதிகங்களை அடுத்து முறைப்படுத்தப் பெற்றன. எடுத்த இயலும் இசையும் இடையே முரிந்து மாறுபடும் இயல்புடையதாய் அமைந்த இசைப்பாடல் முரி எனப்படும்." இத்தகைய முரிப்பாடல்களாக அமைந்தது மாதர் மடப்பிடி' (1.136) என்னும் முதற் குறிப்புடைய பதிகமாகும். இயல் இசைத் திறத்தில் வேறுபாடுடைமையால் யாழில் இசைத்தற்கு அடங்காத நிலையில் யாழ்முரி எனப்பெற்ற இத்திருப்பதிகம் முதல் திருமுறையில் இறுதித் திருப்பதிகமாக வைக்கப்பெற்றது. எனவே, முதல் திருமுறையாகிய இதன்கண் நட்டபாடை தக்கேசி தக்க ராகம் குறிஞ்சி பழந்தக்கராகம் வியாழக் குறிஞ்சி யாழ்முரி என்னும் ஏழு பண்களில் அடங்கிய நூற்று முப்பத்தைந்து திருப் பதிகங்களும் யாழ்முரி என்ற திருப்பதிகம் ஒன்றும் ஆக நூற்று முப்பத்தாறு திருப்பதிகங்கள் இடம் பெற்றிருத்தல் காணலாம். 3. "எடுத்த இயலும் இசையும் தம்மின் முரித்துப் பாடுதல் முரியெனப்படுமே" என்பது சிலப். கானல் வரி அரும் பதவுரை மேற்கோள்.