பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15O மூவர் தேவாரம் - புதிய பார்வை (7) ஏழாம் திருமுறை 'ஏழாந்திருமுறை என்பது சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய திருப்பதிகங்கள் அனைத்தையும் கொண்ட ஒரு தொகுதி. இத் திருமுறையில் 'பித்தா பிறைசூடி (7.1) என்னும் திருப்பதிகம் முதலாக, 'தானெனை முன் படைத்தான் (7.100) என்னும் திருப்பதிகம் ஈறாக நூறு திருப்பதிகங்கள் உள்ளன. பாடல்களின் தொகை ஆயிரத்திருப்பத்தாறாகும். இத்திரு முறையில், இந்தளம் பியந்தைக் காந்தாரம் தக்கராகம் காந்தாரப் பஞ்சமம் நட்டராகம் நட்டபாடை கொல்லி புறநீர்மை கொல்லிக் கெளவாணம் சீகாமரம் பழம் பஞ்சுரம் குறிஞ்சி தக்கேசி செந்துருத்தி காந்தாரம் கவுசிகம் பஞ்சமம் எனப் பதினேழு பண்களுக்குரிய திருப் பதிகங்கள் முறையே தொகுக்கப் பெற்றுள்ளன. நம்பியாரூரர்க்குத் திருமணம் நிகழவிருக்கும் பொழுதிலே சிவபெருமான் வழக்குரைத்து வென்று, அங்குள்ளார் யாவரும் காண திருவெண்ணெய் நல்லூர் அருட்டுறை கோயிலில் புகுந்து மறைந்தருளினார். அப்போது. அப்பெருமான் பணித்தருளிய வண்ணம் பித்தா பிறைசூடி (7.1 ) எனப் பாடிய பதிகம் ஆதலின் இஃது இந்த ஏழாம் திருமுறையில் முதற்கண் வைக்கப் பெறுவதாயிற்று. இத்திருப்பதிகத்துக்குரிய பண் இந்தளம். ஆதலின் இப்பண்ணில் அமைந்த பதிகங்கள் இதனைச் சார வைக்கப்பெற்றன.