பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மூவர் தேவாரம் - புதிய பார்வை மூன்றாவது சுந்தர மூர்த்தித் தேவாரம். ஆதி சைவர் குலத் தில் பிறந்தவர். இறையருளால் பாடல் பாடும் ஆற்றல் பெற்றவர். கணிகர் குலத்துப் பெண் ஒருத்தியையும் வேளாளர் குலத்துப் பெண்மணி ஒருத்தியையும் மணந்து கொண்டவர். பற்றற்ற நிலையில் இல்லறத்தில் இருந்துகொண்டு இறையநுபவத்தில் தோய்ந்து, ஆழங்கால்பட்டு, சேரமான் பெருமாளுடன் இந்த உடலுடன் கயிலைக்குச் சென்று சிவபெருமான் திருவடிகளில் கலந்தவர். காழிப்பிள்ளையாரும் நம்பியாரூரரும் நேரே இறைவன் உலகு சென்ற காட்சியை அனைவரும் கண்டனர். நாவுக்கரசர் எண்ணுகேன் (6.99) என்ற பதிகம் பாடிப் புகலூர்ப் பெருமானின் திருவடியில் கலந்தார் என்பது வரலாறு. இந்த வரலாறுகளினால் சாதி வேறுபாடு அற்ற சமூகத்தைக் காண முடிகின்றது. இந்த அடிப்படைக் கருத்துகளை மனத்தில் இருத்திக்கொண்டு சொற்பொழிவுகளைத் தொடங்கக் கருது கிறேன்.