பக்கம்:மேனகா 1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

மேனகா

முண்டை நம்முடைய வாசல் திண்ணையில் அடிக்கடி உட்கார்ந்திருந்ததை நான் கண்டிருக்கிறேன். இந்த இருமல் இவளை வெளியில் வரும்படி அழைத்த ஜாடை போலிருக்கிறது.

கோமளம்:- ஆமாம்! எனக்குக் கூட இப்போது ஞாபகம் உண்டாகிறது. வராகசாமி சேலத்திற்குப் போன அன்றைக்கு மத்தியானம் எச்சிலை எடுத்துப் போய் வாசலில் எறியப்போன மேனகா அவளுடன் என்னவோ மெதுவாய்ப் பேசிக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டவுடன் உள்ளே வந்துவிட்டாள். நான் போய், “நீ யாரடி?” என்று கேட்டேன். “நான் கூலி வேலை செய்கிறவள். களைத்துப் போய் உட்கார்ந்திருக்கிறேன். தாகத்துக்கு ஜலங் கேட்டேன்; இப்போது உள்ளே போன அம்மாள் ஜலங் கொடுத்தால் சேஷமாய்ப் போய் விடும்” என்று சொல்லி விட்டார்கள். “உயிர் போகிறது; நீங்கள்தான் கொஞ்சம் ஜலம் கையில் வாருங்கள்” என்றாள். “நாங்கள் கொடுக்கக் கூடாது” என்று சொல்லி வந்து விட்டேன். அவள் தான் தூதுவளாயிருக்கவேண்டும்; பகல் வேளையிலேதான் அவள் வருகிற வழக்கம். அவள் நாளைக்கு வந்தால் பிடித்துப் போலீசில் அடைத்து உள்ளதைச் சொல்லும்படி நசுக்கினால் உடனே எல்லாம் வெளியாகிறது.

பெரு:- அடி பைத்தியக்காரி! போ; அவளுக்கு இனி இங்கே என்ன வேலை இருக்கிறது? அவள் வந்த காரியம் முடிந்துபோய் விட்டது. (வருத்தமாக) அடே வராகசாமி! உடம்பு கெட்டுப் போகுமடா: இதில் உனக்கு மட்டுந்தானா விசனம் ? எங்களுக்கு விசனமில்லையா? எவ்வளவோ அருமையான மனிதர் ஐந்து நிமிஷத்தில் வாந்தி பேதியில் போகிறதில்லையா? அந்த மாதிரி நினைத்துக் கொள்; எழுந்து வா; இல்லாவிட்டால் நான் சாதத்தை வெள்ளிப் பாத்திரத்தில் பிசைந்து உள்ளே கொண்டு வரட்டுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/194&oldid=1251053" இலிருந்து மீள்விக்கப்பட்டது