பக்கம்:மேனகா 1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?

191

வில்லையென்பது தகாது. அவர் காலத்தில் மேனகாக்களும், மாயாண்டிப்பிள்ளைகளும் இல்லாமையே காரணமாகலாம். அவருக்கு எத்தனையோ நூற்றாண்டு களுக்குப் பின் வந்த கம்பராவது இதைப் பற்றிச் சொன்னாரா? இல்லை; கம்பர் காலத்திலும் இல்லாமைத் துன்பமே பெருந்துன்பம்.

அப்போது பணமில்லாமையால் கடன் வாங்குதல் வழக்கில் வந்துவிட்டது போலிருக்கிறது! மனிதருக்கு உண்டாகும் அதிகரித்த துன்பத்தைக் கம்பர் எப்படி வருணித்தார், “கடன்கொண்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்றார். புலவருக்கு எப்போதும் தரித்திரக் கொடுமையே பெருங் கொடுமை போலும்! இராவணன், சீதையின் மனதிற்கு விரோதமாக, அவளை வற்புறுத்தித்துக்கிச் சென்றதற்கே, இராமனைக் கம்பர் அழ வைத்தாரே! என்னுடைய விஷயத்திலே இந்த இராக்ஷசியே சம்மதித்து அல்லவோ காரியம் நடத்தி இருக்கிறாள். இராமாயணம் இதைப் போல இருந்தால், கம்பர் பாட்டுப்பாடுவதற்கு முன் தாமே விழுந்து புரண்டு அழுதிருப்பார்! அவர்கள் பேரில் குறை சொல்வதேன்? அவர்களுடைய பெண்டுகள் ஒழுங்காயிருந்து விட்டனர்; இப்படி அயலானோடு ஒடவில்லை, ஆகையால், அவர்களுக்கு இந்தத் துன்பமே யாவற்றிலும் பெரிதென்பது தோன்றவில்லை. எவருக்கும் கிடைக்காத இந்தப் பாக்கியம் எனக்கா கிடைக்கவேண்டும்? நான் முன் ஜென்மங்களில் இதற்காகவா தவம் செய்தேன்? என்ன ஜென்மம் எடுத்தேன்! நான் பி.எல்., பரிட்சையில் தேறிவிட்டேன் என்று பொறாமைப் பட்ட பயல்களா! வாருங்களடா வெளியில்; ஏக புத்திரியான டிப்டி கலெக்டருடைய அழகான பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டேன் என்று பெரு மூச்சு விட்டீர்களே? இப்போது பெருமையைக் கண்டு பொறாமைப்பட ஏன் ஒருவரும் வரவில்லை? இந்தப் பெருமையைச் சிறிதும் நான் எடுத்துக்கொள்ளாமல் அப்படியே கொடுத்து விடுகிறேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/209&oldid=1251055" இலிருந்து மீள்விக்கப்பட்டது