பக்கம்:மேனகா 1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

மேனகா

யாராயினும் வாங்கிக்கொள்வீர்களா? புல்லென்றால் வாயைத் திறப்பது, கடிவாள மென்றால் வாயை மூடிக் கொள்வது; ஆம்; அதுதான் உலகநீதி. என் ஜென்மம் இப்படியா கேவலம் புழுவிலும் தாழ்ந்ததாய், யாவராலும் காறி உமிழ்ந்து நீசமென்று புறக்கணிக்கத் தக்கதாய்ப் போக வேண்டும்! இந்தப் பகல் வெளிச்சத்தில் என் வீட்டை விட்டு வெளியில் வந்தேன் மனிதரின் முகத்தைப் பார்ப்பதற்கே வெட்கமாயிருக்கிறதே! எல்லோரும் என்னைப் பார்த்துப் புரளி செய்து என்னவோ பேசிக்கொள்கிறார்களே! வீட்டில் ஒரு மூலையில் விழுந்து கிடக்காமல் ஏன் வெளியில் வந்தேன்! ஆந்தை, கோட்டான், சாகுகுருவி முதலியவை இரவில் தானே வெளியில் வருகின்றன. அவைகளுடைய ஜோடிகளும் வேறு அழகான பறவைகளைப் பிடித்துக் கொண்டு போய்விட்ட தனால் வெட்கிப் பகலில் வெளிப்படுகிறதில்லை போலிருக் கிறது” என்று பலவாறு நினைத்துப் பெரிதும் வருந்தித் துயரே வடிவாய் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து சென்றான். தன்னுடைய கேவல நிலைமையைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், அவனை அறியாமலே கண்ணிர் வழிந்தது. இடையிலிருந்த வஸ்திரத்தின் தலைப்பால் கண்களைத்துடைத்துக் கொண்டான். “சே! அவமானம் பிடுங்கித் தின்கிறதே! ஐயோ அழுகை வருகிறதே துஷ்டக் கண்களே! ஏன் இப்படிக் கண்ணீரைச் சிந்துகிறீர்கள் பாழுங் கண்களே! என் கட்டில் நில்லாமல் அழுகிறீர்களா? உங்களுக்கு வெட்கமில்லையா? கேவலம் சண்டாளியாக மாறிப்போன ஒரு துஷ்டையின் பொருட்டு நீங்கள் அழலாமா? இனி அழுவீர்களானால் உங்களை என் கையால் திருகி எறிந்துவிடுவேன். போதும் நில்லுங்கள். ஒகோ! அவளுக்காக அழவில்லை, எனக்கு வந்த இந்த இழிவுக்காக அழுகிறீர்களோ? நீங்கள் உயிருடன் இருந்தால் அந்த மகாபாவியை இனி எப்போதாயினும் காணநேருமோ என்று அஞ்சி வெயிலில் கரையும் பனிக்கட்டியைப் போல முற்றிலும் நீராய்க் கரைந்து ஓடிப்போய்விட நினைக்கிறீர்களோ? கண்களே! செய்யுங்கள் செய்யுங்கள்; அழுங்கள் அதுதான் சரி” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/210&oldid=1250833" இலிருந்து மீள்விக்கப்பட்டது