பக்கம்:மேனகா 1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?

205

போய்விடுகிறேன். அதுதான் சரியான காரியம்” என்று தனக்குள் ஒருவாறு உறுதி செய்துகொண்டான். அவனது மனதில் ஒருவித ஆழ்ந்த விரக்தி உண்டானது. அவன் தெய்வபக்தி உள்ளவன். ஆதலால், ஈசுவரத் தியானம் செய்யவேண்டும் என்னும் ஆவல் அடங்கா வேட்கையாக அவன் மனதில் உதித்தது. தான் பார்த்த இடமெல்லாம் கடவுள் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அங்கு தோன்றிய ஒவ்வொரு பொருளும் தனக்கு ஒவ்வொரு செய்தி சொல்லுவதாக மதித்தான். அகண்டாதீத பரிபூரண வஸ்துவும் சாந்தநிறைவுமான சச்சிதாநந்தப் பொருளே சலனமற்ற அந்த ஆழ்ந்த கடலில் பிரதி பிம்பித்துத் தோன்றுவதாக நினைத்தான். நுரையின் வெண்மை நிறமும், நீரின் கறுநிறமும் கலந்த தோற்றத்தைக் கொண்ட பெருத்த அலைகள் தரையில் மோதுவதும் அதே நிறத்தைக் கொண்ட பிரமாண்டமான மலைப் பாம்புகள் துவார பாலகர்களைப் போலவழிமறித்து, “மனிதர்களே! நீங்கள் பாவிகள், ஈசுவரனுக்கருகில் வராதீர்கள்” என்று கோபித்து சீறிக் கடிக்க வருதலைப் போல இருந்தது. கடலிலிருந்து உண்டான “ஹோ” என்னும் ஒலி “ஐயோ! நானும் அலைகளும் ஆதியந்தம் இல்லாமல் யுகங்கள் யுகங்களாக இங்கிருந்து உங்களுக்கு எவ்வளவோ புத்திமதி சொல்லியும் அவற்றின்படி நடந்து பிழைத்துப் போகாமல் மதிமந்தராகவே இருந்து இறந்து இறந்து பிறந்து பிறந்துகொண்டே இருக்கிறீர்களே! எத்தனையோ தடவைகளில் நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் வரும்போ தெல்லாம் என்னை அறிந்து கொள்ளாமல் புது மனிதரைப் போலக் காணப்படுகிறீர்களே! உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் புத்திமதியை இப்படி மறந்து பிறந்து கொண்டிருக்கிறீர்களே!” என்று கடல் ஓலமிட்டு அழும் ஓசையைப்போல இருந்தது. அலைகளில் அகப்பட்ட சிறிய கட்டைகளும், தேங்காய் மட்டைகளும் அலைகளுடன் கரைக்கு வருவதும் திரும்பிச் சிறிது தூரம் வரையில் தண்ணிரில் செல்வதுமாய் அவை அழுகி நாசமாய்ப் போம்வரையில் தவித்தது எவ்விதம் இருந்தது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/223&oldid=1250869" இலிருந்து மீள்விக்கப்பட்டது