பக்கம்:மேனகா 1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழன்

233

என்பதையும் அவற்றில் இருந்த இலக்கத்தையும் பார்த்துக் கொண்டு திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

தாசில்:- எசமான் இங்கே வந்துவிட்டாரா?

ரெங்க:- இன்னமில்லை, 7-மணிக்கு வருவாங்க-என்றான்.

அதன் பிறகு இருவரும் அவனை அவ்விடத்திலேயே விடுத்து அப்பாற் சென்று ஒரு மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழிந்தது; டிப்டி கலெக்டரும், கனகம்மாளும் வண்டியில் வந்து இறங்கினார்கள். ரெங்கராஜு தன் கையில் வைத்திருந்த இரண்டு டிக்கெட்டுகளையும் சாம்பசிவத்தினிடம் கொடுத்தான்; அவர் வாங்கிக்கொண்டார். மூவரும் உள்ளே போனார்கள். இரண்டொரு நிமிஷ நேரத்தில் சென்னைக்குப் போகும் வண்டியும் வந்தது. சாம்பசிவமும், கனகம்மாளும் வண்டியில் ஏறிக்கொண்டனர். யாவற்றையும் மறைவிலிருந்த கலெக்டர் நேரில் பார்த்தார்.

தாசில்:- பார்த்தீர்களா மனிதருடைய யோக்கியதையை? ரஜா கொடுக்க முடியாதென்று நீங்கள் உத்தரவு அனுப்பியிருக்கிறீர்கள். அதை மீறிக்கொண்டு போகிறார். ரெங்கராஜுகையில் டிக்கட்டுகளுடன் நின்றபோது, நாம் கண்டு கொண்டபடியால், அவன் உண்மையைச் சொன்னான்; இல்லாவிடில் சுற்றுப்பிரயாணம் போயிருப்பதாகத் தான் அவனும் சொல்லுவான். இவர் பட்டணத்துக்குப்போய்த் திரும்பி வந்து, எங்கேயாவது சுற்றுப் பிரயாணம் போனதாக எழுதி பணம் வாங்கப் போகிறார்; பாருங்கள்- என்றார்.

நிகழ்ந்தவை யாவும் கனவோ வென்று ஐயமுற்று துரை திகைத்தார். சாம்பசிவம் எவ்விஷயத்திலும் அயோக்கிய தனமாக நடக்கக்கூடியவ ரென்றும் எத்தகைய இழிவான காரியத்தையும் செய்யப் பின்வாங்காதவர் என்றும் நினைத்து, அவர் விஷயத்தில் என்ன செய்வதென்பதை பற்றி யோசனை செய்து தாந்தோனியாரிடம், “நாம் இப்போது என்ன செய்யலாம்?”-என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/251&oldid=1250932" இலிருந்து மீள்விக்கப்பட்டது