பக்கம்:மேனகா 1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

மேனகா


தாசில்:- அவர் இரண்டு நாளைக்கு முன்னர் ரஜா இல்லாமல் பட்டணம்போய், உத்தியோக முறையில் அம்பாள் சத்திரம் முதலிய இடங்களுக்குப் போனதாக பணம் வாங்கி, சர்க்காரை ஏமாற்றியிருக்கிறதற்கு எழுத்து மூலமான ருஜுவிருக்கிறது. அதைக் கொண்டு அவரைத் தண்டனை செய்விக்கலாம். தவிர, இப்போது ரஜா இல்லாமல் திரும்பவும் பட்டணம் போகிறார். இது வேலையினின்று நீக்கப்படத் தக்க குற்றம். இவற்றைத் தவிர, லஞ்சம் வாங்கின விஷயங்கள் இருக்கின்றன. இப்போதே நாமொன்று செய்யலாம்; பட்டணத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரிக்கு ஒரு தந்தி கொடுத்து, தொளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் இருக்கும் வக்கீல் வராகசாமி அய்யங்கார் வீட்டிற்கு, தஞ்சை டிப்டி கலெக்டர் இன்னார் நாளை காலையில் வருகிறார் என்றும், அவரை அப்படியே கைதி (Arrest) செய்யவேண்டும் என்றும் உத்தரவு அனுப்புங்கள். அவர் பட்டணத்தில் ரஜா இல்லாமல் இருந்ததற்கும், அது சாட்சியாகும்- என்றார்.

அதைக் கேட்ட துரை கால்மணி நேரம் யோசனை செய்தார். அருகிலிருந்த தந்தியாபீசில் ஒரு தந்திக்காகிதம் வாங்கிவரச்செய்து அதில் ஏதோ விஷயத்தை எழுதி, சென்னை போலீஸ் கமிஷனருக்கு அதை உடனே அவசரமாக அனுப்பும்படி சொல்லிக் கொடுத்தார். அவ்வாறே தந்தி உடனே அனுப்பப்பட்டுப் போனது.


❊ ❊ ❊ ❊ ❊
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/252&oldid=1250933" இலிருந்து மீள்விக்கப்பட்டது