பக்கம்:மேனகா 1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

மேனகா

பரம யோக்கியனைப் போலவும் நடித்து வந்த தனது கணவன், தன்னிடம் வரும்போதெல்லாம், “கண்ணே!” என்றும் “முத்தே!” என்றும் கொஞ்சிக் குலாவி, “உன்னை ஒரு நொடி விடுத்தாலும் உயிர் வாழ்வேனா” என்று சொல்லி வஞ்சித்துத் தன் மனதையும் காதலையும் ஒருங்கே கொள்ளை கொண்ட கணவன் - தன் கண்ணெதிரில் அப்படிச் செய்ததை உண்மை யென்று அவள் மனது எளிதில் நம்பவில்லை. அவளுக்கு யாவும் வியப்பையும் திகைப்பையும் கொடுத்தன. சித்தப்பிரம்மை கொண்டவளைப் போல உருட்டி உருட்டி விழித்தாள். அவளது மனத்தில் எழுந்த உணர்ச்சிகளும் எண்ணங்களும் புயற் காலத்தில் கடல் கொந்தளிப்பு ஆர்ப்பரித்தலைப் போல இருந்தன. ஆனால், திகைப்பு என்னும் பூட்டினால் வாயின் சொற்கள் பூட்டப்பட்டு வெளிப்படாமல் தடைபட்டு நின்றன.

அவள் ஒரு பெரிய குடும்பத்தில் உதித்த உத்தமி, நற்குண நல்லொழுக்கத்திற்கு இருப்பிடமானவள்; தமிழ் நாட்டுப் பெண்ணாகையால் அவள் இந்துஸ்தானி பாஷையிற் பேசுதல் மாத்திரம் அறிவாள். தமிழ் ஆங்கிலம் முதலிய இரண்டு பாஷைகளிலும் நல்ல பாண்டித்தியம் பெற்றவள்; அவ்விரண்டு பாஷைகளிலும் கவிகள் பாடும் திறமை வாய்ந்தவள்; அழகிலும், புத்தியிலும் சிறந்தவள்; இயற்கை அழகும் குணமும் வாய்ந்த அவள், கல்வி கேள்விகள் நிரம்பப் பெற்று பட்டை தீட்டப்பெற்ற வைரக்கல்லைப் போல, தனிச்சுடராய் விளங்கினாள். அவளுடைய தந்தை சென்னை கவர்னரின் நிருவாக சபையில் ஒரு அங்கத்தினர்; அவர் செல்வாக்கும், செல்வமும் நிரம்ப உடையவர். அவரது அருமைப் புத்திரியாயிருந்தும் அவள் செருக்கென்பதே அற்றவளாய், பெண்களுக்கெல்லாம் நற்பெயரும் மேம்பாடும் தேடிக் கொடுக்கும் சட்டகமாய் விளங்கினாள். அவளது நடைஉடை தோற்றம் யாவும் மிருதுத் தன்மையையும், பொறுமையையுமே சுட்டின. அவள் தமிழ்ப் பாஷையிலுள்ள இதிஹாச புராணங்கள், நீதி நூல்கள், சமய நூல்கள் முதலியவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/254&oldid=1250935" இலிருந்து மீள்விக்கப்பட்டது