பக்கம்:மேனகா 1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டதும் பொய் விண்டதும் பொய்

237

நன்றாகப் படித்தவள் ஆதலின் இந்துக்களின் சகோதர வாஞ்சையையும் மனமார்ந்த அன்பையுங் கொண்டவள். பரிசுத்தமான பழக்க வழக்கங்களை உடையவள். கணவனிடம் பக்தியும், நம்பிக்கையும் நிரம்பக்கொண்டவள்; அவனே தனது உயிரென மதித்தவள். அத்தகைய கபடமற்ற ஸ்திரீ ரத்னம் தன் விஷயத்தில் நைனா முகம்மது அந்தரங்கத்திற் செய்து வந்த வஞ்சகங்களை அறிந்து, அதற்குப் போதிய ருஜாவையும் கண்ணிற்கு எதிரே காண்பாளாயின், அவள் மனது எப்பாடுதான் படாது? மாயாண்டிப் பிள்ளையின் கடிதங்களைக் கண்டபோது வராகசாமியின் மனம் எப்பாடு பட்டதோ, மேனகாவைப் பற்றி எவ்வகையான எண்ணங்களும் உணர்ச்சிகளும் கொண்டதோ அவற்றைக் காட்டினும் பதின்மடங்கு அதிகரித்த அல்லலையும் ஆத்திரத்தையும் நூர்ஜஹானது மனம் பெற்றது; அவள் புருஷனாகவும், நைனாமுகம்மது மனைவியாகவும் இருந்தால், தன் கண் முன்னே கண்ட விபசார நடத்தையின் பொருட்டு நைனா முகம்மதைக் கத்தியாற் குத்தி சித்தரவதை செய்து கண்டதுண்டமாக்கியிருப்பாள். அல்லது நைனாமுகம்மதுவின் கண் காண அவன் மனைவி அவ்விதமான தீய செயலைப் புரிய முயன்றிருந்தால், அவனும் அப்படியே செய்வான் என்பதற்கு ஆட்சேபனையில்லை. ஆனால், பெண் பேதையாகி அவள் அவனை அவ்வாறு தண்டித்தல் கூடுமா? கணவன் மீது அதிகாரமற்ற அபலையின் மனதில் எவ்வளவு வீராவேசம் தோன்றினாலும் அதனால் யாது பயன்? கணவன் மனைவி என்னும் சம்பந்தத்தில் பலவான் கட்சியே நீதியானதாக வல்லவோ இருந்து வருகிறது. நூர்ஜஹான் யாது செய்தாள்? ஆண்மக்களைப் போல கொல்ல வேண்டும் என்னும் நினைவைக் கொண்டாளா? இல்லை; தனது ஆருயிர்க் கணவனது தேகம் - தனக்கே உரிய பொருளாகியதன் கணவனது - தேகம் அன்னிய மாதரால் தீண்டப்படுவதா வென்னும் பொறாமை ஒன்றையே கொண்டாள். அவனது தேகத்தின் மதிப்பு அவள் மதிப்புக்கு முன்னிலும் கோடி மடங்கு உயர்ந்து தோன்றியது. பிற மாதர் மீது சிதறிச்சென்றிருந்த அவனது ஆசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/255&oldid=1250937" இலிருந்து மீள்விக்கப்பட்டது