பக்கம்:மேனகா 1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டதும் பொய் விண்டதும் பொய்

239

நினைத்தான்; இவ்விரண்டு காரியங்களும் மிகவும் எளிதில் சாதிக்கக் கூடிய விஷயங்களல்லவா! அவ்வெண்ணம் மலையை விழுங்கினவன் அதை ஜீரணம் செய்து கொள்ள சுக்குக் கஷாயம் குடிக்க நினைத்தது போலிருந்தது எழுந்து உட்கார்ந்த தன் மனைவியின் கரத்தை அவன் மெல்லப் பிடித்தான். ஆல கால விஷத்தைக் கொண்ட கொடிய நாகம் தனது கையின் மேல் பட்டதைப்போல மதித்த நூர்ஜஹான், தனது கையை அப்பால் இழுத்துக்கொண்டு விரைந்து கட்டிலை விட்டுக் கீழே இறங்கினாள். அவனும் எழுந்து பாய்ந்து அவளை இறுகக் கட்டிப் பிடித்தான். நூர்ஜஹானுக்கு அடக்க முடியா ஆத்திரமும், அழுகையும், அருவருப்பும் மிகுந்த உரத்தோடு பொங்கி யெழுந்தன. அவனைக் காண்பதற்கும் அவளது கண்கள் கூசின; தன் சுந்தர வதனத்தை அப்புறம் திருப்பிய வண்ணம் பதைபதைத்தவளாய்த் தன்னை விடுவித்துக் கொண்டு போய்விடவேண்டும் என்னும் ஆவலோடு நின்றாள். நைனா முகம்மது அவளை முரட்டாட்டமாக இழுத்துக் கட்டிலில் உட்காரவைத்து, தானும் அவளுக்கருகில் உட்கார்ந்து அவளது மோவாயை தன் வலக்கரத்தால் தாங்கி முகத்தைத் தன் பக்கம் திருப்பி நயமாக, “அப்பாடா! எவ்வளவு கோபம்! எவ்வளவு ரோஷம்! நீ ஆண் பிள்ளையாக மாத்திரம் இருந்தால் இந்நேரம் என்பாடு திண்டாட்டமாயிருக்கும்” என்று மிகவும் கொஞ்சிய குரலால் பேசி, தனது முகத்தை அவளுடைய முகத்திற்கு அருகில் கொணர்ந்து, “கண்ணே! இவ்வளவுதானா உன்புத்தியின் மேன்மை! இதையெல்லாம் உண்மை யென்று நினைத்துக் கொண்டாயா! ஆகா! நீ பிராமணப்பெண்ணைப் போலவே இருக்கிறாயே! இம்மாதிரி உடைதரிக்க நீ எங்கு கற்றுக் கொண்டாய்? இந்த உடையில் உன் அழகே குறைந்து போய்விட்டதே! இதை நீ சீக்கிரம் விலக்கி விட்டால், அதன் பிறகே என் கண்ணாட்டியான நூர்ஜஹான் தன் இயற்கை அழகில் விளங்குவாள். இதையெல்லாம் உண்மை யென்று நினைக்காதே!” என்று தேன்போல மொழிந்து முகத்தில் முத்தமிட முயல, அவள் மகா அருவருப்போடு தனது முகத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/257&oldid=1250939" இலிருந்து மீள்விக்கப்பட்டது