பக்கம்:மேனகா 1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

மேனகா

அப்பால் இழுத்துக்கொண்டு, “எதை யெல்லாம் ?” எனறு கேட்டாள்.

நைனாமுகம்மது, “என்ன ஒன்றையும் அறியாதவளைப் போலக் கேட்கிறாயே! நடந்ததையெல்லாம் நான் திரும்பச் சொல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறாயா? அதிருக்கட்டும், இந்தப்பெண் எங்கிருக்கிறாள்? இங்கேயே இருக்கிறாளா? தன்னுடைய வீட்டுக்குப் போய்விட்டாளா? அதைத் தெரிவி! கோபிக்காதே! என் சீமாட்டியல்லவா! “ஆறுவது சினம்” என்று தினந்தினம் படித்துக் கொண்டேயிருப்பாயே; அதை நினைத்துக்கொள். இதன் உண்மையையெல்லாம் நான் உனக்குப் பின்னால் விரிவாய்ச் சொல்லுகிறேன். அப்போது நான் குற்றமற்றவன் என்று நீ நிச்சயமாக அறிவாய். முதலில் அவள் எங்கிருக்கிறாள் என்பதைத் தெரிவி” என்று தந்திரமாக மொழிந்தான்.

நூர்ஜஹான் ஒன்றையும் அறியாதவளைப்போல, “பெண்ணா! எந்தப் பெண்?” என்றாள். நைனா முகம்மது புன்சிரிப்பைக் காட்டி, “ஆகா என்ன வேஷம் இது? அவளை உனக்குத் தெரியாதா? கொஞ்ச நேரத்துக்கு முன் இங்கிருந் தாளே அவள் தான்; இதோ உன் மேலிருக்கும் உடைக்கு எவள் சொந்தக்காரியோ அவள்தான்” என்றான்.

நூர்ஜஹான் பைத்தியங் கொண்டவளைப் போல உருட்டிப்பார்த்து, “என்ன ஆச்சரியம்! இதெல்லாம் கனவில் நடக்கிறது என்றல்லவோ நினைத்தேன்! உண்மையாக இவ்விடத்தில் வேறொரு பெண் வந்தாளா? அவளிடம் சொல்லப்பட்ட வார்த்தையெல்லாம் உங்களால் சொல்லப் பட்டது தானா?” என்றாள்.

அவள் பெருங்கொதிப்பை தன் மனதில் அடக்கிக் கொண்டு அவ்வாறு கேட்கிறாள் என்பதை உணர்ந்து எவ்விதமாயினும் அவளைச் சாந்தப்படுத்தாமல் விடக்கூடா தென உறுதிசெய்து கொண்டு அவன் முன்னிலும் இளக்கமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/258&oldid=1250940" இலிருந்து மீள்விக்கப்பட்டது