பக்கம்:மேனகா 1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

மேனகா

எதையோ நினைத்துக் கொண்டு அவளைத் துரத்தி ஓடினான். அவள் அந்த அறையை விடுத்து அப்பாற் சென்றாள். அவனும் விடாமல் தொடர்ந்தான். இரண்டொரு அறைகளைக் கடந்தவுடன் அவள், “அக்கா! அக்கா!” என்று உரக்கக் கூவ, சற்று துரத்திலிருந்து, “ஏன் அம்மா! இதோ வந்தேன்” என்று இன்னொரு குரல் கேட்டது. அதைக் கண்ட நைனா முகம்மது தயங்கி நின்றுவிட்டான். அவ்வீட்டில் இரண்டு நாட்களாக வந்திருந்த நூர்ஜஹானுடைய அக்காள் கோஷா ஸ்திரீயாதலால் அவளை நைனாமுகம்மது பார்த்தல் கூடாது; ஆகையால், தான் செய்யவேண்டுவது என்னவென்பதை அறியாமல் தத்தளித்துக் கலங்கினான். அச்சம் மேற்கொண்டு அவனைப் பெரிதும் வதைத்தது. நிற்கவும் வலுவற்றவனானான்; அவர்கள் என்ன செய்வார்களோ, மேனகா எங்கிருக்கிறாளோ, அவள் தனது வீட்டிற்குச் சென்றால் அதனால் என்னதுன்பம் சம்பவிக்குமோ, அதைத் தன் மாமனார் உணர்ந்தால் அதனால் என்ன விபரீதம் நேருமோ வென்று பலவாறு நினைத்துக் கலங்கினான். என்றாலும், தன் மனைவி தன்னை எவ்விதம் கோபித்துக் கடிந்தாலும் தன்மீதுள்ள ஆழ்ந்த அபிமானத்தினால் தன்னைக் காட்டிக்கொடுக்க மாட்டாள் என்று ஒரு அந்தரங்கமான குரல் அவன் மனதில் கூறியது. மிகவும் களைப்படைந்தவனாய்த் தனது சயன அறைக்குள்ளிருந்த கட்டிலில் படுத்து நித்திரையின்றி வருந்திக் கிடந்தான்.


❊ ❊ ❊ ❊ ❊
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/264&oldid=1251346" இலிருந்து மீள்விக்கப்பட்டது