பக்கம்:மேனகா 1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

253

படுத்துக்கொண்டவள் அரை நாழிகைக்கெல்லாம் தூங்கி விட்டாள். நானும் மேனகாவும் பேசிக்கொண்டிருந்தோம். சுமார் 8, 8 1/2 - மணி இருக்கலாம். அம்மா! அம்மா!! வென்று கூப்பிட்டுக் கொண்டு உள்ளே ஒருவன் வந்தான். “யாரடா?” என்றேன். “நான் தஞ்சாவூர் டிப்டி கலெக்டருடைய சேவகன் ரெங்கராஜு, எஜமான் வாசலில் பெட்டி வண்டியில் இருக்கிறார்; மகளோடு பேசவேண்டுமாம்; கூப்பிடுகிறார்” என்றான் அவன். உடனே மேனகா புறப்பட்டு வெளியில் போனாள். வாசலில் நின்ற பெட்டி வண்டியிலிருந்த மனிதரோடு பேசிக் கொண்டு கொஞ்ச நாழிகை நின்றாள். பிறகு அவர் பெட்டி வண்டியின் கதவைத் திறந்தார். அவளும் ஏறி உள்ளே உட்கார்ந்து கொண்டாள். உடனே வண்டி போய்விட்டது. நடந்தது இவ்வளவுதான்- என்றாள்.

போலீஸ்:- அந்தச் சேவகன் சாதாரணமான உடை தரித்திருந்தானா ? அல்லது சேவகனைப் போல சர்க்கார் உடுப்புப் போட்டிருந்தானா?

பெரு:- ஆம், தலைப்பாகை, நீண்ட சட்டை, வெள்ளி வில்லை முதலிய அலங்காரத்துடன் வந்தான்.

போலீஸ்:- அதற்குமுன் அவன் எப்போதாவது, டிப்டி கலெக்டருடன் வந்திருக்கிறானா? அல்லது வந்தவனைப் போலாகிலும் இருந்தானா?

பெரு:- ஒரு வருஷத்துக்கு முன், அவரோடு இரண்டு சேவகர்கள் வந்தார்கள் எனக்கு. அவ்வளவாக ஞாபகமில்லை. இவன் அவர்களில் ஒருவனாக இருக்கலாம்; ஆனால், நான் இவனை அவ்வளவு நன்றாகக் கவனிக்கவில்லை.

போலீஸ்:- பெட்டி வண்டியில் இருந்தவர் டிப்டி கலெக்டர் தானே? அதைப்பற்றி சந்தேகம் இல்லையே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/271&oldid=1251353" இலிருந்து மீள்விக்கப்பட்டது