பக்கம்:மேனகா 1.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

295

செய்றான். அவுங்க பெரிய ராக்சசப் பயலுங்கடா: போன வருசம் கெவுணரு பங்களாவுலே ஒரு விருந்து நடந்திச்சாம்! அதுலே ஒரு பாப்பானும் மூணு தமிளனும் ஒரே மேசேலே ஒக்காந்தானுவளாம். மீன்குஞ்சே நெய்யிலே பொரிச்சு ஆளுக்கு ஒரு தட்டு வச்சாங்களா அக்காளே! அந்தப் பாப்பான் நாலு தட்டையும் பொட்லரு கையிலே யிருந்து புடிங்கிக் கொட்டிக்கினு தானே துன்னுட்டானாம். அப்பாலே இன்னம் எட்டுத் தட்டுக் கொண்டாரச் சொல்லித் துன்னானாம்; அக்காளே! அவங்க ஆம்பிளெங்களும் அப்படித்தான் பொம்பிளெங்களும் அப்படித்தான். பொம்பிள்ளெங்க, நாடவம் பார்க்க வந்தா நாடவக்காரனைப் பிடிச்சுக்கிறாங்க - என்றான்.

முதல் மனிதன்- (பல்லைக் கடித்துக்கொண்டு) பார்டா? அக்காளே! வெட்கம், மானம், சூடு, சொரணை, ஒண்ணுமில்லாம பட்டப்பகல்லே, ஒரு கெளவியையும் இட்டுக்கினு நாடவக்காரன் ஊட்டுக்கு வந்துட்டான்; பாக்கறதுக்கு மகாபெரிய மனிசனைப் போல இருக்கறாண்டா! ஒதேடா அக்காளே! - என்றான்.

இன்னொருவன், “அக்காளே! குடுடா சாக்கடே ஹல்வா”

தங்களைத்தான் அவர்கள் அவ்வாறு தூற்றுகிறார்கள் என்பதை சாம்பசிவம் அறிந்து அந்தப் பக்கம் திரும்பி உற்று நோக்கினார்; அப்போது அவர்கள் ஒன்றையும் அறியாத பரம சாதுக்களைப் போலக் காணப்பட்டனர். அவர்களில் ஒருவன் எழுந்து மிகவும் மரியாதையாகவும் அன்பாகவும் நன்மையும் புன்னகையும் ஜ்வலித்த முகத்தோடும், “என்ன நாயனா பாக்கறீங்க? யாரைத் தேட்றீங்க; சொன்னாக்க நாங்க காட்டறோம் நாயனா!” என்று உபசாரமாகக் கேட்டு அதே காலத்தில் தணிந்த குரலில் ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால், “அக்காளே அக்காளே” என்று திட்டினான். சாம்பசிவம் பட்டணத்துச் சோம்பேறிகளின் குணத்தை நன்றாய் அறிந்தவராதலின் பேசாமல் வண்டியில் ஏறிக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/313&oldid=1251420" இலிருந்து மீள்விக்கப்பட்டது