பக்கம்:மேனகா 1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனதிற்குகந்த மன்மதன்

33

அடைந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். ஒரு கைம் பெண்டாட்டியால் வளர்க்கப்பட்டால் மனிதன் கழுதையாக மாறிவிடுவா னென்றால், மூன்று புண்ணியவதிகளும் தம்முடைய விவேகத்தைச் செலுத்தி ஆளாக்கிய வராக சாமியைப் பற்றி அதிகம் கூற வேண்டுவதுண்டோ? அவனுக்கு அவர்கள் எந்த விஷயத்திலும் சுயபுத்தியே இல்லாமற் செய்துவிட்டனர். அவன் நடந்தாற் கால் தேய்ந்து போகும்; அவன் தண்ணிரில் நனைந்தால் உப்பு மூட்டையாகிய அவன் தேகம் கரைந்து போகும்; அவன் வீட்டைவிட்டு வெளியிற் சென்றால் அவனை பூதம் விழுங்கிவிடும் என்று நினைத்து அவன் எந்தக் காரியம் செய்தாலும் அதனால் அவனுக்குப் பெருத்த துன்பமுண்டாகும் என்று அவனை வெருட்டி வந்தனர்.

ஒரு ஊரில் பெருத்த தனிகன் ஒருவன் இருந்தான். அவன் சங்கீதத்தில் மகா நிபுணன். தோடி ராகம் என்றால் தூக்கு என்ன விலை என்பான். பல்லவி என்றால் படி எத்தனை பைசா என்பான். அவன் வீட்டில் ஒரு கலியாணம் நேர்ந்தது. அதற்காக அன்றிரவு ஊர்வலம் வர நினைத்து, அதற்கு மேளக்காரனை ஏற்பாடு செய்து அவனுக்கு நூறு ரூபாய் முன் பணம் கொடுத்தனுப்பினான். அம்மேளக்காரன் அன்று பகலில் வேறொரு ஊர்வலத்தில் மேளம் வாசித்துக்கொண்டு வந்தான். அதைக் கண்ட நமது தனிகனுக்கு அடக்கமுடியாத கோபம் பிறந்தது. மேளக்காரனை வரவழைத்து “நாயே!” என்றும், “கழுதே!” என்றும் வைதுவிட்டு சீறி விழுந்தான். தன்னிடம் பெற்ற முன் பணத்தை கீழே வைத்து அப்பாற் போகும்படி உத்தரவு செய்தான். மேளக்காரன் உண்மையை அறிய மாட்டாமல் நடுநடுங்கித் திருடனைப்போல் விழித்துத் தான் எவ்விதப் பிழையும் செய்யவில்லை என்றான். அதைக் கேட்ட தனிகன், “அடே மேளக்கார போக்கிரிப் பயலே! யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? இப்போது வந்த ஊர்வலத்தில் நீ மேளம் வாசிக்கவில்லையா? முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கவா பார்க்கிறாய்?” என்றான். மே.கா.1-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/51&oldid=1248118" இலிருந்து மீள்விக்கப்பட்டது