பக்கம்:மேனகா 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

மேனகா


மேளக்காரன் :- ஆம்; நான் மேளம் வாசித்தது உண்மை தான். அது எப்படி குற்றமாகும்? - என்றான்.

தனிகன் :- ஆகா இன்னமும் என்னை முட்டாளென்று மதிக்கிறாய்? இப்போது குழாயிலுள்ள பாட்டுக்களை யெல்லாம் ஊதிவிட்டு இரவில் வெறுங் குழாயோடு வந்து இருளில் எங்களை ஏமாற்றவா பார்த்தாய்? நானா ஏமாறுகிறவன் பணத்தைக் கீழே வையடா முட்டாப் பயலே. என்றான். மேளக்காரன் பொங்கி யெழுந்த தனது சிரிப்பை மிகவும் பாடுபட்டு அடக்கிக் கொண்டான். அத்தகைய மூட சிகாமணியிடத்தில் மேளம் வாசிக்காமல் இருப்பதே மேன்மை யென நினைத்து, தான் வாங்கிய முன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போனானாம்.

அதைப்போல வராகசாமி அதிகமாய்ப் பேசிவிட்டால், அவனுடைய தொண்டையிலுள்ள சொற்கள் செலவழிந்து போவதனால் தொண்டை காலியாய்போய் விடுமோவென அஞ்சியவரைப் போல் விதவைகள் அவனை மெளனகுரு சாமியாக்கி வைத்திருந்தனர். அதனால் அவனுக்கு பிறருடன் பேசும் திறமையும், வாக்குவாதம் புரியும் வன்மையும் இல்லாமற் போயிற்று.

அவனுக்குத் தேவையான ஒவ்வொரு விஷயத்தையும் விதவையரே கவனித்து வந்தார்கள். ஆதலின், அவனுக்கு எதைக் குறித்த கவலையும் நினைவும் இல்லாமற் போயின. அவன் கடைக்குப் போய் ஒரு நெருப்புப் பெட்டியும் வாங்கியறியான். எப்போதாயினும் விலக்கக்கூடா வகையில் அவன் கடைக்குப் போக நேர்ந்தால், புளி வராகனிடை என்ன விலை யென்றும், ஜவ்வாது விசை என்ன விலை யென்றும் கேட்பான். இம்மாதிரி வளர்க்கப்பட்டு வந்தமையால், அவன் படிப்ப தொன்றிலேயே தன்முழு நினைவையும் வைத்து வந்தான். அதனால் அவனுக்குப் பெருத்த நன்மையும் பல தீமைகளும் உண்டாயின. அவன் எந்தப் புஸ்தகத்தையேனும் ஒருதரம் படிப்பானாயின், கிராமபோ (Gramaphone)னைப் போலப் புஸ்தகத்திலுள்ள விஷயங்கள் யாவும் அப்படியே அவன் மனதிற் பதிந்துபோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/52&oldid=1248119" இலிருந்து மீள்விக்கப்பட்டது