பக்கம்:மேனகா 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனதிற்குகந்த மன்மதன்

35

முதலிலிருந்து முடிவு வரையில் மனப் பாடமாய்ப் பக்கங்களின் இலக்கம், பத்திகள், வாக்கியங்கள், முற்றுப் புள்ளிகள், மைப் புள்ளிகள் முதலியவற்றையும் மறவாமல் ஒப்புவிப்பான். அவன் ஒவ்வொரு பரிட்சையிலும் சென்னை இராஜதானிக்கே முதற் பையனாகத் தேறி வந்தவன். எம்.ஏ., பி.ஏ., பி.எல்., முதலிய எல்லாப் பரீட்சைகளிலும் அவ்வாறே முதன்மை யடைந்தான். வெளிப்டையான அந்தச் சிறப்பைக் கண்டு மகிழ்ந்தே நம் சாம்பசிவையங்கார் அவனுக்கு மேனகாவை மணம் புரிவித்தார்.

ஆனால் மாப்பிள்ளை (மணப்பிள்ளை)யின் உண்மைத் திறமை அவனை வீட்டிற் பார்த்தவருக்கே நன்கு விளங்கும். “அடே வராகசாமி! இடுப்புத்துணி அவிழ்ந்து போய் விட்டதடா!” என்று பெருந்தேவியம்மாள் சொன்னாலன்றி, அவனுக்கு தன் இடையிலிருந்த துணி நெடுந்துரம் பிரயாணம் சென்றது தெரியாது. “சாப்பிட்டு நிரம்ப நாழிகை யாயிற்று, உனக்குப் பசிக்கும், எழுந்துவா!” என்பாள் அன்னை. அவனுக்கு உடனே பசி வந்துவிடும்! எழுந்து உணவருந்தப் போவான். அதற்குள் பெருந்தேவியம்மாள், “ அடே பகலில் நீ அதிகமாய் சாப்பிட்டதினால்.இப்போது கூடப் புளித்த ஏப்பம் வந்ததே; திரும்பவும் இப்போது சாப்பிட்டால் அஜீரணம் அதிகமாய் விடும் பேசாமற் படுத்துக்கொள்!” என்பாள். உடனே அவனுக்கு பசியடங்கிப்போம். அஜீரணமும் இருப்பதாய்த் தோன்றும், உடனே படுக்கைக்குப் போய் விடுவான்.

நாட் செல்லச் செல்ல அவன் படிப்பதிலேயே தன் புத்தியைச் செலுத்திச் செலுத்திப் பழக்கம் அடைந்தான் ஆகையால், அவனுடைய நினைவு அவனிருந்த இடத்திலேயே இருந்ததில்லை. அவனுடைய தேக சம்பந்தமான காரியங்கள் யாவும் இயந்திரத்தின் இயக்கத்தைப் போலப் பிறருடைய முயற்சியினால் தாமாய் நிறைவேறி வந்தன. அவன் வீட்டைவிட்டு வெளியில் சென்றால், அவன் மனது ரோமபுரியை ஆண்ட சீசரின் சரித்திரத்திற் சென்றிருக்கும். மனதில் நடக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/53&oldid=1248120" இலிருந்து மீள்விக்கப்பட்டது