பக்கம்:மேனகா 1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

மேனகா

நாடகத்திற் கிசையக் கைவிரல்கள் அபிநயங்கள் காட்டிக் கொண்டும் யாதாயினும் எழுத்துக்களை எழுதிக்கொண்டும் இருக்கும். உதடுகள் சொற்களால் அசைந்தவண்ணம் இருக்கும். அவன் வெளிப் பார்வைக்கு உன் மத்தனைப்போல காணப்படுவான். அதனால் அவனுக்குப் பல துன்பங்கள் அடிக்கடி நேர்ந்து வந்தன. மோட்டார் வண்டிகளிலும், டிராம் வண்டிகளிலும் தினந்தினம் அவன் உயிர் தப்பி மறு ஜெனனம் எடுத்து வந்தான். வண்டி யோட்டுவோர் மணியை யடித்துக் குழாயால் ஊதி எவ்வளவோ கூச்சலிடுவார்கள். அவன் முழுச் செவிடனைப்போல போய்க்கொண்டிருப்பான். அவர்கள் வண்டிகளை நிறுத்திவிட்டு அவனை வாயில் வந்தவிதம் திட்டுவார்கள். அண்டையிற் செல்லும் மனிதர் அவனுடைய உடம்பைப் பிடித்து இழுத்து விடுவார்கள். அவன் ஒருநாள் இரவு 7 1/2 மணிக்குக் கடற்கரையிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்தான். தன் வீட்டின் வாயிலில் வந்தவன் அதற்குள் நுழையாமல், மறதியாக மேலும் நெடுந்துரம் தெருவோடு போய் அங்கு தன் வீட்டை போலத் தோன்றிய வேறொரு வீட்டிற்குள் நுழைந்தான். காலையலம்பிக் கொண்டு உள்ளே நுழைவது அவனுடைய வழக்கம் ஆகையால், எதிரில் வைக்கப்பட்டிருந்த செம்பைக் கையில் எடுத்தான். கூடத்திலிருந்த அவ்வீட்டுப் பெண்டீர் அவனைக் கள்வனென மதித்துக் “கூ கூ திருடன் திருடன்!” எனக் கூவி ஆரவாரம் செய்தனர். அண்டை வீட்டாரும் தெருவிற் சென்றோரும் தடிகளோடு உள்ளே நுழைந்து செம்பைத் திருடிய கள்வனைப் பிடித்துக் கொண்டனர். வராகசாமி அப்போதே தான் செய்த தவறை உணர்ந்து, உண்மையைக் கூறினான். அதை எவரும் நம்பாமல் அவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போயினர். ஐயங்கார், ஆடு திருடின கள்ளனைப்போலத் திருட்டு விழி விழித்து செய்யவேண்டுவ தறியாமல் தவித்து நின்றார். அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் சீதாராமநாயுடு அவனுடன் படித்தவ ராதலால் அவனைக் கண்டவுடன், “அடே வராகசாமி! என்னடா இது? எங்கடா வந்தாய்?” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/54&oldid=1248121" இலிருந்து மீள்விக்கப்பட்டது