பக்கம்:மேனகா 1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனதிற்குகந்த மன்மதன்

37

ஐயங்கார் உண்மையைச் சொன்னார். அவர் விழுந்து விழுந்து சிரித்து ஜனங்களை அதட்டி யனுப்பி விட்டுத் தன் நண்பனது மானத்தைக் காப்பாற்றி அவனை வீட்டிற்கு அனுப்பினார்.

இன்னொருநாள் கச்சேரிக்குப் புறப்படும் அவசரத்தில், சட்டையைப் போட மறந்து தலைப்பாகையை மாத்திரம் அணிந்து கொண்டு வீட்டை விட்டு நெடுந்துரம் போய்விட்டார். தெருவிலிருந்தோர் யாவரும் அந்த அவதாரத்தைக் கண்டு வியப்புற்றுக் கைகொட்டி நகைத்தனர். கோமளம் ஓடிவந்து உடம்பில் சட்டையில்லை யென்பதை நினைப்பூட்டினாள்.

அவன் உணவருந்த இலையில் உட்கார்ந்து, சாதம் பரிமாறப்படு முன் பரிஷேசனம் (நீர் சுற்றுதல்) செய்தல் மாதம் முப்பது நாட்களிலும் நடைபெறும்.

மேனகா வீட்டிற்கு வந்த சில மாதங்களில் அவனுடைய தாய் இறந்தாள். அவளுக்குப் பதிலாக அடுத்த வீட்டு சாமாவையர் மூன்றாம் விதவையின் பட்டத்திற்கு வந்து சேர்ந்தார். வராகசாமி தன் யெளவன மனைவி யிடத்தில் அதிக விருப்பம் வைத்துவிட்டால் தம்முடைய அதிகாரம் குறைந்து போகுமென நினைத்த பெருந்தேவி முதலியோர் அவன் அவள்மீது வெறுப்பையும் பகைமையும் கொள்ளும்படி செய்து வந்தனர். அவன் இயற்கையில் இரக்கம், தயாளம், அன்பு, நல்லொழுக்கம் முதலிய குணங்களைக் கொண்டவன். பிறருக்கு தீங்கு நினைப்பவனன்று. பிறர் காலில் முள் தைத்தால் அதைக் காணச் சகியாதவன். என்றாலும், அவன் சகோதரிமாரின் சொற்களுக்கு அதிகமதிப்பு வைத்திருந்தமையால், மேனகா விஷயத்தில் மாத்திரம் மிக்க கொடியவனாய் நடந்து வந்தான். அவர்கள் அடிக்கடி அவள்மீது கோள்சொல்லி அவனுக்குத்தூபம் போட்டுக் கொண்டேயிருப்பார்கள். அவன் தலை, கால் பாராமல் அவளை அடித்து விடுவான். இரண்டு மூன்று முறை கையிலும் பிறவிடங்களிலும் சூடு போட்டுவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/55&oldid=1248122" இலிருந்து மீள்விக்கப்பட்டது