பக்கம்:மேனகா 1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனதிற்குகந்த மன்மதன்

43

என்பது மாதர்க்கணிகலன் அல்லவா? நான் எவ்வளவு தான் ஒழுங்காய் நடக்க முயன்றாலும், என்னையும் மீறி யாதாயினும் பிழை நேருதல் கூடும். என்னுடைய உயிருக்குயிராகிய தேவரீர் என் விஷயத்தில் க்ஷமையும், தயையும் காட்டாவிட்டால் எனக்கு வேறு யார் கதியிருக்கிறார்கள்? காரிகையாருக்குக் கணவன் சன்னிதானமே புகலிடம். அடிப்பதும் உங்கள் கை; அணைப்பதும் உங்கள் கை, பெற்றோர் எவ்வளவுதான் பாடுபட்டு தேக போஷணைக்குக் குறையின்றி என்னைப் பாதுகாக்கினும், அவர்களால் என் மன நோய்க்கு மருந்து செய்தல் கூடுமோ! அதற்குரிய வைத்தியர் தாங்களன்றோ? என் ஆத்ம ரக்ஷகர் தேவரீரேயாகும். பட்டினியாக வருந்தித் தவிக்கும் என் மனசுக்கும் ஆன்மாவுக்கும் போஷணை செய்ய அவர்களால் எழுமோ? அதற்குரிய வள்ளல் தேவரீரே யென்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இவ்வொரு வருஷமாய் தேவரீர் என்னை அகல விலக்கியபோதிலும், என் மனசை விட்டு அரை நொடியும் தேவரீர் அகல நான் விடவில்லை. ஆனால், இதனால் என் உணர்வு, துயில் முதலியவை மாத்திரம் விலகி விட்டன. என்னுடைய உயிர் கொஞ்சங் கொஞ்சமாய் முக்காற் பாகம் போய்விட்டது. இன்னம் சொற்ப பாகம் விண்ணிற்கும் மண்ணிற்குமாக ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்கவோ, அல்லது நிற்க வைக்கவோ வல்லமை பெற்ற ஒரு தனிப்பிரபு இவ்வுலகில் தேவரீர் ஒருவரே, அக் காரியம் ஈசுவரனாலும் ஆகாது.

என்னைத் தேவரீர் எவ்வளவுதான் அடித்தாலும், வைதாலும் அது அப்போது என் தேகத்துக்குத் துன்பமாய்த் தோன்றினாலும் அடுத்த க்ஷணமே தேவரீரைப் பற்றிய நினைவு என்னை வருத்தி வந்தது. என் கையிலுள்ள சூட்டுத் தழும்புகளைக் காணும்போதெல்லாம் என் மனம் வருந்தித் தவிக்கிறது. சூட்டைப் பெற்றதற்காக வன்று, என்னை உங்களுடைய உரிமைப் பொருளாக மதித்து முத்திரை போட்ட தேவரீர் இப்போது என்னை உரிமை யற்றவளாக்கி விலக்கியதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/61&oldid=1248128" இலிருந்து மீள்விக்கப்பட்டது