பக்கம்:மேனகா 1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

மேனகா

என் மனசைக் கலக்குகிறது. நிமிஷத்திற்கு ஒரு சூட்டைப் பெற்றாலும், தேவரீருடைய சன்னிதானமே எனக்கு இன்பமாய்த் தோன்று மன்றி, வேறிடம் சுக முடைய தாமோ? பன்னிரண்டு மாதங்களாய் வானைக்காணாப் பயிரைப் போல வாடி வதங்கிக் கிடக்கும் இந்த அற்பப் பிராணியைக் கைதுக்கிவிடுவீர்களென்று ஒவ்வொரு நிமிஷமும் எதிர் பார்த்தேன். இன்னமும் என் பொல்லாத வேளை அகல வில்லை. தேவரீரை விடுத்துப் பிரிந்து இவ்வாறிருந்து இந்தச் சரீரம் இனி என்ன பயனை அடைப்போகிறது? இன்னம் சில நாட்களில் நான் இவ்வுடம்பைத் துறந்துவிடுவேன் என்பது நிச்சயம். அதற்குள் ஒரு தரமாவது தேவரீருடைய திருமேனியைக் கண்டு தரிசித்தாலன்றி என் கட்டை கடைத்தேறாது; என் மனமும் வேகாது.

கொண்டவரால் வெறுத்து விலக்கப்படும் பெண்டிருக்குக் குளங்களும், கிணறுகளுமே பேருபகாரிகளாயிருந்து கைகொடுத்து உதவுதல் வழக்கம். இவ்வூரில் சாமந்தான்குளம், ஐயன்குளம் என்று இரு குளங்களும் இதற்காகவே இருந்து உதவி புரிந்து வருகின்றன. எத்தனையோ தடவைகளில் அவைகளை நோக்கி நான் நடந்தேன். என் உயிரையும் மனசையும் கொள்ளை கொண்ட தேவரீருடைய முகாரவிந்தத்தை ஒரு தரமாவது காணாமல் போக என் மனம் சகிக்க வில்லை; என் செய்வேன்! இனி வேறு எவ்விதம் எழுதுவேன்? அபயம் அபயம் காத்தருளல் வேண்டும். அடியாள் மேனகா.”

என்று கோமளம் மிக்க உருக்கமாகவும், கேட்போர் மனது இளகுமாறும் படித்தாள். அக்கடிதத்தின் கருத்தை அப்போதே ஊன்றிக் கேட்டறிந்த வராகசாமியினது கண்களும், மனமும் கலங்கின. அது கனகம்மாளின் தூண்டலினால் எழுதப் பட்டதாகவும், முழுதும் பகட்டென்றும் நினைத்து அவன் அதை அதுவரையில் நன்றாய்ப் படிக்கவில்லை. அப்போதே அதில் எழுதப்பட்டிருந்த ஒவ்வொரு மொழியும், அந்தரங்க அவாவினால் மனப்பூர்வமாக எழுதப்பெற்றதாக அவனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/62&oldid=1248129" இலிருந்து மீள்விக்கப்பட்டது