பக்கம்:மேனகா 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனதிற்குகந்த மன்மதன்

45

செவிகளில் கணிர் கணிரென்று ஒலித்தது, அவனது சிரத்தின் ஒவ்வொர் உரோமத்தையும் பிடித்து உலுக்கியது. முன்பே கனிந்திருந்த அவனுடைய மனது எளிதிற் கலங்கி முற்றிலும் நைந்து அவனது முகத்தை விகாரப்படுத்தியது. கண்களினின்று கண்ணீர்த் துளிகள் வெளிப்பட்டன. அங்கவஸ்திரத்தால் அவன் கண்களைத் துடைத்துக் கொண்டான். நல்ல பரிசுத்தமான மனதையும், அன்பையும், கல்வியறிவினையும் பெற்ற பெண்மணியான தனது பேதை மனையாட்டியைத் தான் குடிகாரனைப்போல அடித்ததும், வைததும், சுட்டதும் நினைவுக்கு வந்தன. அவன் தன்னைத் தானே வெறுத்து வைதுகொண்டான். அவனது அப்போதைய மன நிலையைக்கண்ட அவ்வஞ்சகர், அதுவே சரியான பாகுபத மென்று நினைத்தனர்.

பெருந்தேவி, “என்னவோ போனது போகட்டும்; இப்போது அவர் இன்னொரு இரண்டாயிரம் ரூபாயும், நகைகளை மீட்க ரூ.800ம் தருவதாயும், நாம் கடிதம் எழுதினால் அவளை அழைத்து வந்து விடுவதாயும், சாமாவுக்கு எழுதியிருக்கிறார். ஏனடா வராகசாமி! அழைத்துக்கொண்டு வரும்படி எழுதுவோமா? பாவம்! நல்ல வயசுக் காலத்தில் பெண் அங்கே இருந்து பாலியத்தை ஏன் வீணாக்கவேண்டும்? குளத்தில் கிணற்றில் விழுந்து செத்து வைத்தாளானால், பாவமும், பழியும் நமக்கு வந்து சேரும். என்னவோ கோபம் பாபம் சண்டாளம், அப்பா! நீ கோபத்தை மனசில் வைக்காதே!” என்றாள்.

சாமா:- வராகசாமிக்குத்தான் அவள் மேல் அவ்வளவு கோபமென்ன? இவன் மனசு தங்கமான களங்கமற்ற மனசு. பிறர் காலில் முள் தைக்க இவன் சகிக்க மாட்டானே! மேனகாவை நிரந்தரமாய் விட்டுவிட இவனுக்குத் தான் மனம் வருமா ? என்னவோ இவனுடைய மாமனார்தான் புத்தியில்லாமல் பெண்ணை அழைத்துக் கொண்டு போனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/63&oldid=1248130" இலிருந்து மீள்விக்கப்பட்டது